'ஆசையாக ப்ரபோஸ் செய்ய திட்டம் போட'... 'கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி'... 'வீடு பற்றி எரிந்தபோதும்'... 'காதலியை திகைக்க வைத்த இளைஞர்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்தோழியிடம் ப்ரபோஸ் செய்ய வீடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்துவிட்டு அவரை அழைத்து வர சென்ற இளைஞருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

இங்கிலாந்திலுள்ள யார்க்ஷ்ரின் மாகாணத்தின் அபேடெலி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் தனது நீண்டகால தோழி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் தனது தோழியிடம் காதலை சொல்ல திட்டமிட்டுள்ளார். அதற்காக நேற்று இரவு வீட்டை பூக்களால் அலங்காரம் செய்து வீடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்துவிட்டு, சர்பிரைஸாக தனது தோழியை அழைத்துவர வெளியே சென்றுள்ளார். இதையடுத்து அவர் வெளியே சென்ற சில நிமிடங்களில் மெழுகுவர்த்திகளில் ஒன்று வீட்டில் இருந்த துணி ஒன்றின் மீது விழுந்து வீட்டில் தீப்பற்றிக்கொண்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் வீட்டில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தோழியுடன் அங்கு வந்த இளைஞர் நடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனாலும், முயற்சியை தளரவிடாத அவர் பற்றி எரிந்து கொண்டிருந்த தனது வீட்டிற்கு வெளியே தோழியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஒருபுறம் வீடு எரிந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் ப்ரபோஸ் செய்ததை சற்றும் எதிர்பார்க்காத தோழி திகைத்துப்போய் நின்றுள்ளார். பின்னர் அடுத்த சில வினாடிகளில் அவரும் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே தீயணைப்பு படையினர் மறுபக்கம் வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்துள்ளனர். பின்னர் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர். அந்த மாகாண தீயணைப்புத்துறையினர் டுவிட்டரில் இதுகுறித்து பதிவிட்டு, தங்களை அவர்கள் திருமணத்திற்கு அழைப்பார்கள் என நம்புகிறோம் எனக் கூறியுள்ளனர். அதற்கு பலரும் அந்த இளைஞரை திருமண ஏற்பாடுகள் செய்ய மட்டும் அனுமதிக்காதீர்கள் என கிண்டல் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
