இப்பவும் கனவு மாதிரியே இருக்கு.. 12 வருஷம் கழிச்சு கிடைத்த ஷோயி.. நாயை கட்டியணைத்த உரிமையாளர்!
முகப்பு > செய்திகள் > உலகம்கலிபோர்னியா: 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன செல்லப் பிராணி ஷோயி மீண்டும் உரிமையாளருடன் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நமது உறவினர்களோ, அண்ணனோ, தம்பியோ அல்லது நெருங்கிய நணபனோ திடீரென காணாமல் போன செய்தி அறிந்தால் அவர்களது பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரிந்து சென்றவர்கள் 20 வருடங்கள் கழித்து சேர்ந்தால் அதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. அதேபோன்று ஒரு பெண் தான் வளர்த்த செல்லப்பிராணி நாய் ஒன்று காணாமல் போய் 12 வருடங்கள் கழித்து கிடைத்திருப்பது உரிமையாளரை உற்சாகமடையை வைத்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லஃபிய்டி நகரை சேர்ந்தவர் மிச்சில். இவர் 2009-ம் ஆண்டு முதல் தனது வீட்டில் ஷோயி என்ற செல்லப்பிராணி நாயை வளர்த்துவந்தார். இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிச்சில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் இருந்த அவரது செல்லப்பிராணி நாய் ஷோயி மாயமானது. தான் ஆசையாக வளர்த்த நாயை காணாததால் வீடு மற்றும் அக்கம்பக்கத்திலும் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து விலங்குகள் நல அலுவலகத்திலும் புகார் அளித்தார்.
இந்த புகாரையடுத்து காணாமல் போன ஷோயி நாயின் கழுத்தில் பொறுத்தப்பட்டிருந்த 'Micro Ship' உதவியுடன் தேடும் பணிகளும் நடைபெற்றது. ஆனால், எங்கு தேடியும் செல்லப்பிராணி நாய் கிடைக்கவில்லை. அந்த 'மைக்ரோப் சிப்' பொறுத்தும் நிறுவனம் ஷோயி நாய் உயிரிழந்திருக்கலாம் என கருதி தேடும் பணிகளை நிறுத்தியது. இதனையடுத்து 2015ம் ஆண்டு ஷோயி உயிரிழந்துவிட்டதாக பட்டியலையும் வெளியிட்டது. இந்த அறிவிப்பை பார்த்த மிச்சல், மிகவும் மன வேதனையடைந்தார். இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின்னர் செல்லப்பிராணி நாய் ஷோயி தற்போது உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. காணாமல் போன ஷோயி லஃபிய்டி நகரில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் ஸ்டாக்டன் என்ற நகரில் உயிருடன் மீட்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாக்டன் நகரில் உள்ள ஒரு குப்பைத்தொட்டி அருகே உடல்நிலை மிகவும் மோசமடைந்து நாய் ஒன்று கிடப்பதாக போலீசார், விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விலங்குகள் நல ஆர்வலர்கள் அந்த நாயை மீட்டு அதன் உடலில் கட்டியிருந்த மைக்ரோ சிப்பை ஆய்வு செய்தனர். அதில், ஒரு செல்போன் நம்பர் இடம்பெற்றிருந்தது. அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது மிச்சல் உடைய செல்போன் எண் என்பதும், அந்த நாய் 2010-ம் ஆண்டு காணாமல்போன ஷோயி என்பதும் தெரியவந்தது. பின்னர்,ஷோயி உயிரோடு இருக்கும் செய்தி மிச்சலிடம் தெரிவித்தபோது, எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தார் மிச்சல். 12 ஆண்டுகளுக்கு முன் காணமல்போன தனது செல்லப்பிராணி ஷோயி கண்டுபிடிக்கப்பட்ட தகவல் கேட்டு மிச்சல் மிகுந்த ஆனந்தமடைந்தார். உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு செல்லப்பிராணி ஷோயி அதன் உரிமையாளர் மிச்சலிடம் ஒப்படைக்கப்பட்டது.

மற்ற செய்திகள்
