உங்க கணவர் கிட்ட இருந்து 'லெட்டர்' வந்துருக்கு.. ஏங்க அவரு இறந்து 6 வருஷம் ஆச்சு.. ஆனா அவரோட கையெழுத்து தான்.. நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா: அமெரிக்காவில் இறந்து போன கணவர் அனுப்பியதாக வந்த கடிதத்தின் பின்னணி குடும்பத்தாருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் வாழும் இளைஞர்கள் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் உடனடியாக வாட்ஸாப் எடுத்து அடுத்த நொடியே சொல்லி விடுகின்றனர். அதற்கான பதிலும் அடுத்த நொடியே அவர்களுக்கு கிடைத்து விடுகிறது.
அவர்களுக்கு எல்லாம் கடிதங்கள் எழுதுவது டைனோஸர் காலத்தில் இருந்த நடைமுறை என கூட நினைக்கலாம். கடிதம் புழகத்தில் இருந்த காலத்தில் அதை எழுதுவதும், அந்த கடிதம் கிடைத்தபின் அதன் பதிலுக்காக காத்திருக்கும் சம்பவங்கள் எல்லாம் நடக்கும். வழக்கமாக ஒரு கடிதம் வந்தடைய சராசரியாக ஒரு வாரம் ஆகலாம். அதிகபட்சமாக ஒரு மாதம் கூட ஆகலாம். ஏதாவது அவசரம் என்றால் உடனடியாக தொடர்பு கொள்ள முடியாத நிலை இருக்கும்.
இரண்டாம் உலகப் போர் காலம்:
இந்நிலையில், அமெரிக்காவில் ஒரு கடிதம் வந்தடைய 76 ஆண்டுகள் ஆகியுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் ஜான் கோன்சல்வேஸ். இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் அமெரிக்க ராணுவத்துக்காக ஜெர்மனியில் அவர் போரிட்டுக் கொண்டிருந்தார்.
நலமாகவே உள்ளேன்:
போர் முடிய இருந்த காலகட்டத்தில் தனது 22-ஆவது வயதில் தன் தாய்க்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், 'அன்புக்குரிய அம்மா. தங்களின் கடிதம் கிடைத்தது. அங்கு அனைவரும் நலமாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நானும் இங்கு நலமாகவே இருக்கிறேன். இங்கு உணவு மட்டும் தான் ஒரே குறை. பெரும்பாலான சமயங்களில் சற்று தரம் குறைந்ததாகவே உள்ளது. உங்களை விரைவில் சந்திப்பேன் என நம்புகிறேன். அன்புடன்-உங்கள் மகன் ஜானி' என எழுதியுள்ளார்.
பணியாளர்கள் கண்டெடுப்பு:
சுமார் 1947ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த கடிதம் ஜானி அவர்களின் குடும்பத்திற்கு 2022-ஆம் ஆண்டு தான் கிடைத்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள அஞ்சல் சேவை விநியோக மையத்தில் அந்தக் கடிதத்தைப் பணியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
முகவரியில் கடிதம் சேர்ப்பு:
76 ஆண்டுகளாக அந்தக் கடிதம் பிரிக்கப்படாமலேயே இருந்த அக்கடிதத்தை சம்பந்தப்பட்ட முகவரியில் கொண்டு சேர்க்கப்பட்டது. அதை ஜானின் குடும்பத்தினர் ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் பெற்றுக் கொண்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக கடிதத்தை எழுதிய ஜான் கோன்சல்வேஸ் கடந்த 2015-ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார். தன் கணவர் 76 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய கடிதம் தற்போது கிடைத்துள்ளதை எண்ணி நெகிழ்ச்சியடைந்த 89 வயதான ஏஞ்சலினா நெகிழ்ச்சி அடைந்து பேசியுள்ளார்.
'இதை என்னால் நம்பவே முடியவில்லை. அவருடைய கையெழுத்தைக் காண்பது அற்புதமான உணர்வைத் தருகிறது. அவர் மீண்டும் எனக்குக் கிடைத்துவிட்டதைப் போலத் தோன்றுகிறது' எனக் கூறியுள்ளார்.