"தம்பி பீரோவ உடைச்சிடாதப்பா" திருடனுக்கு இப்படி ஒரு லெட்டரா? அந்த தீர்க்கதரிசி யாருப்பா?! 😂
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: வக்கீல் ஒருவரின் வீட்டில் இருமுறை கொள்ளை சம்பவம் நடந்தும் போலீஸ் திருடனை கண்டுபிடிக்காததால் வக்கீல் நேரடியாக திருடனுக்கே கடிதம் எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு தாம்பரம், கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் காட்வின். வக்கீலான இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது, அவரது வீடு உடைக்கப்பட்டு 55 சவரன் நகைகள், 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது.
வழக்கு பதிவு:
இதனால் அதிர்ச்சியடைந்த காட்வின் கொள்ளை சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் போலீசார் விசாரணையில் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட நபரின் கைரேகை மற்றும் அவரது முகம் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்தது. இருந்தாலும் இதுநாள் வரை கொள்ளையடித்த ஆசாமி சிக்கவில்லை.
சிக்கிய கேமரா காட்சிகள்:
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் காட்வின் வீட்டில் குடியிருந்த ஜான்பால் என்பவரது வீட்டில் பீரோவை உடைத்து, அரை பவுன் மோதிரம் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவத்திலும் திருடனின் முகம் பதிவாகிய கேமரா காட்சிகளும், கைரேகைகளும் கிடைத்தன. ஆனால், உயர் போலீஸ் அதிகாரிகள் வரை சென்றும், இன்று வரை திருடன் பிடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் தற்போது காட்வின் செய்த செயல் போலீசார் மட்டுமல்லாது அப்பகுதி மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உருக்கமான கடிதம்:
சென்ற கடந்த 28-ம் தேதி காட்வின் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு செல்ல வேண்டி இருந்துள்ளது. இந்நிலையில் அவர் ஊருக்கு செல்லும் முன்பாக திருடனுக்கு உருக்கமான கடிதம் ஒன்று எழுதி வீட்டு பீரோவில் ஒட்டி உள்ளார்.
அதில், 'தம்பி பீரோவை உடைத்து விடாதே. எப்படியும் உன்னை போலீசார் பிடிக்க போவதில்லை. சேதாரம் செய்துவிடாதே' என கடிதத்தில் எழுதியுள்ளார். தற்போது இந்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாக பரவி வருகிறது.
இரண்டு முறை கொள்ளை:
இதுகுறித்து வக்கீல் காட்வின் கூறியபோது, 'இதுவரை என்னுடைய வீட்டில் இரண்டு முறை கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இதுவரை கொள்ளையனை போலீசார் கைது செய்யவில்லை. இந்த முறை நான் வெளியூருக்கு போகும் முன் சேலையூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பிற்காக கடிதம் கொடுத்தேன்.
ஆனால் போலீசார் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லை என எழுதி தருமாறு கேட்டனர். எனவே எதற்கு சுற்றி வளைத்து பேச வேண்டும் என நேரடியாக திருடனிடம் பேசிக்கொள்வோம் என்று முடிவுக்கு வந்தேன்' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
