‘அமெரிக்கர்களின் ஆரோக்கியம் தான் முக்கியம்’... ‘உங்க நாட்டு மக்களை உடனே அழைச்சுட்டுப் போங்க’... ‘பிற நாடுகளுக்கு தடாலடியாக தடை விதித்த அதிபர்’!
முகப்பு > செய்திகள் > உலகம்விதிகளை மீறும் வெளிநாட்டினரைத் தாயகம் உடனடியாக அழைத்துக்கொள்ளாத பிற நாடுகள் மீது கடுமையான விசா தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 5 லட்சமாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,747 ஆகவும் உள்ளது. அதேபோல் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு அங்கு நேற்று ஒரே நாளில் 2,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், `அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நேரத்தில் அங்கு வசிக்கும் பிற நாட்டு மக்களைத் திரும்ப அழைத்துக்கொள்ளாமல் இருப்பது, காரணமில்லாமல் தாமதமாக அழைத்துக் கொள்வது மற்றும் போக்கு காட்டும் நாடுகள் விசா தடைகளைச் சந்திக்க நேரிடும்' என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிற நாட்டைச் சேர்ந்த மக்கள் பலர் அமெரிக்காவின் விதிமுறைகளை மீறுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும், அவர்களைத் தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்லாத நாடுகள் மற்றும் தங்கள் நாட்டுக்குச் செல்ல விரும்பும் மக்களை அழைத்துச் செல்லாத நாடுகளுக்கே இந்த அறிவிப்பு எனக் கூறப்பட்டுள்ளது. இருந்தும் ட்ரம்ப் எந்த நாடுகளின் பெயர்களையும் வெளிப்படையாகக் கூறவில்லை. நாடுகளின் மீது விதிக்கப்பட்டுள்ள விசா தடை உடனடியாக நடைமுறைக்கு வந்து டிசம்பர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விதிமுறைகளை மீறும் பிற நாட்டினரை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்புவதில் உறுதியாக இருக்க வேண்டும் பாதுகாப்பு செயலர் மற்றும் அமைச்சர்களிடம் அறிவுறுத்தியுள்ளார் ட்ரம்ப். இன்னும் 7 நாட்களுக்குள் நாடுகளின் பட்டியல் பாதுகாப்புத் துறைச் செயலருக்கு அனுப்பப்படும் என்றும் பட்டியல் கிடைத்ததும் அவர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிடுவார் எனவும் கூறப்படுகிறது. பிற நாட்டினரால் அமெரிக்கர்களுக்கு சுகாதார இடர்பாடுகள் ஏற்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
