‘நின்றுப்போன கல்யாண சோகத்திலும்’... ‘முகூர்த்த நேரத்தில்’... ‘ஊரடங்கால் தவித்த இளம்பெண்ணுக்காக’... ‘இளைஞர் செய்த உணர்வுப்பூர்வமான காரியம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணம் நின்றுபோனாலும், மன வருத்தத்திலும் சோர்ந்துவிடாமல் இளைஞர் ஒருவர் முகூர்த்த நேரத்தில் வெளியூரில் சிக்கி தவித்த மாணவியை பத்திரமாக மீட்டு கொண்டு வந்து அவரது குடும்பத்தாரிடம் சேர்த்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள காஜிம்பிராம் நகரில் வசித்துவருபவர் சுதேவ். இவருக்கு கடந்த வியாழக்கிழமை காலை 11 மணிமுதல் 12 மணி வரை திருமணம் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. திருமணம் நடக்கவில்லை என்றாலும், அந்த நாள் மறக்க மடியாத அளவுக்கு துன்பத்தில் தவித்த மாணவிக்கு உதவிசெய்து சுதேவ் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ்நாடு திருச்சி மாவட்டம் அருகே, தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்த ஜென்மா என்ற மாணவி, குரூப் ஸ்டெடிக்காக கேரளா மாநிலம் குன்னம்குளத்தில் உள்ள அவரது தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அதற்குள் ஊரடங்கு உத்தரவுப் போட வீடு திரும்ப முடியாமல் மாணவி ஜென்மா அங்கேயே இருந்துள்ளார். இந்நிலையில், மாணவியின் தாயார் நோய்வாய்ப்பட்டு அவதிக்குள்ளாக அவரைப் பார்க்க, ஜென்மா அவசர வீட்டுக்கு அழைத்து வரவேண்டி இருந்தது.
இதையடுத்து மாணவியின் தந்தை ஹேமதாஸ், திருச்சூர் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் சோபா சுபின் உதவியைக் கோரியுள்ளார். அவர், சுதேவிடம் கேட்க, மறுக்காமல் அவரும், அவரது நண்பர்களும், திருமணம் நின்றுபோனதையும் பொருட்படுத்தாமல், அன்றைய தினமே குறிக்கப்பட்ட முகூர்த்த நேரமான 11 மணிக்கு கேரளாவில் இருந்து ஒரு வண்டியில் கிளம்பியுள்ளனர். பின்னர் மாலை 3 மணியளவில் தமிழகத்தைச் சேர்ந்த திருச்சியில் கொண்டுவந்து பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். சுதேவின் இந்த செயலை மக்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
