'ஆயிரக்கணக்கில்' பாதிக்கப்பட்டுள்ள 'மருத்துவ' பணியாளர்கள்... 'அச்சம்' தரும் எண்ணிக்கையால்... உலக சுகாதார நிறுவனம் 'கவலை'...
முகப்பு > செய்திகள் > உலகம்உலக அளவில் 22 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் சுமார் 18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 1.10 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கொரோனாவால் மோசமான பாதிப்பை சந்தித்துவரும் நிலையில், உலக நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தினால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் உலகம் முழுவதும் ராணுவ வீரர்களைப் போல மருத்துவ பணியாளர்கள் தங்களுடைய நாட்டு மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இரவு பகல் பார்க்காமல் மருத்துவமனைகளிலேயே தங்கி பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்களுடைய நிலை குறித்த புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் கலங்கச் செய்து வருகிறது.
இதையடுத்து தற்போது வரை 22 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 52 நாடுகளில் கடந்த 8ஆம் தேதி வரை பதிவான விவரம் எனவும், முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
