'தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கல, அதனால...' முரண்பாடுகள் இருந்தாலும் அணைத்து நாடுகளும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும்... ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Mar 27, 2020 01:29 PM

உலகநாடுகள் அனைத்தும் இணைந்து ஒன்றாக கொரோனோவை அழிப்போம் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

UN Secretary-General urged all nations to eradicate coronavirus.

கொரோனா வைரஸ் என்னும் தொற்று நோய், உலக நாடுகள் அனைத்தையும் அன்றாட வாழ்க்கையிலும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்படைய செய்துள்ளது. இந்நிலையில் ஜி-20 மாநாடு கூட்டி தற்போதைய சூழல் மற்றும் பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று சீனா, பிரான்ஸ் நாடுகள் வலியுறுத்தின.

அதையடுத்து நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவரான சவுதி அரேபிய அரசர் சல்மான் தலைமையில் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் ஜி-20 அமைப்பின் உறுப்பினர்களான அர்ஜென்டைனா, ஆஸ்திரேலியா, பிரேசில் ,கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தெற்கு ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.

சிறப்பு அழைப்பாளர்களாக பாதிக்கப்பட்ட நாடுகள் என்ற வகையில் ஸ்பெயின், சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இவர்களைத் தவிர ஐநா சபை, உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம் ஆகிய சர்வதேச அமைப்புகளும் கலந்து கொண்டனர்.

ஜி 20-யின் தலைவர் சவுதிஅரேபியா அரசர் சல்மான்  மாநாட்டை துவக்கி வைத்து கொரோனா  பாதிப்பை பற்றி விவரித்தார் மேலும் உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள இந்த அபாயத்திற்கு எதிராக கூட்டணி அமைத்து இதை நாம் அனைவரும் ஒன்று கூடி கடக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், "நாம் இப்போது உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போரில் இருக்கிறோம்,. இன்னும் இப்போரில் நாம் வெற்றியடையவில்லை. இதில் நாம் வெல்ல வேண்டுமெனில் உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை அவசியம், பொருளாதார தடைவிதிக்கப்பட்ட நாடுகள் மீதான தடை விலக்க வேண்டும். மேலும் போர்க்கால திட்டமிடல் அவசியம்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் " நாடுகளுக்கிடையே பல முரண்பாடுகள் இருந்தாலும் இந்த கொடுமையான காலத்தில் நாம் அவற்றை மறந்து ஒற்றுமையும் உழைத்து கொரோனா வைரஸை வெல்ல வேண்டும். அதுமட்டும் இல்லாமல் எல்லா நாடுகளும் கொரோனா வைரஸ் பற்றி முறையான பரிசோதனை, கண்டுபிடிப்பு, தனிமைப்படுத்துதல், சிகிச்சை முறை, கட்டுப்பாடு, மக்கள் நடமாட்டத்தில் கட்டுப்பாடுகள், போன்றவை மூலம் தான் கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து கட்டுப்படுத்த முடியும்.

அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் இல்லாத சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் இதிலிருந்து தப்பிக்க தகுந்த வழியாக இருக்கும். கொரோனா வைரஸ்  பாதித்த வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவிட முன்வர வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : #CORONAVIRUS