'வீட்டுல இருந்திருந்தா இது நடந்திருக்குமா'... 'கதறி துடித்த பெற்றோர்'... சென்னை அருகே நடந்த கோரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 27, 2020 01:06 PM

கொரோனா அச்சத்தின் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஏரியில் சென்று குளித்த 3 மாணவிகள் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tiruvallur : 3 School Girls Drown to Death while taking bath in lake

திருவள்ளூர் அடுத்த கூடப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி  குமாரி. இந்த தம்பதியரின் மகள் ஐஸ்வர்யா. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களின் உறவினர் சென்னை தாம்பரத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகள் தர்ஷினி ரமேஷின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஏரிக்கு குளிக்க செல்லலாம் என முடிவு செய்தனர்.

இதையடுத்து ஐஸ்வர்யா, தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் சந்தியா மற்றும்  சவுமியாஆகிய இருவரையும்  தன்னோடு ஏரிக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து தோழிகள் நான்கு பேருடன் ஐஸ்வர்யாவின் தாய் குமாரியும் ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். ஏரியில் இறங்கி 4 பேரும் குளித்து கொண்டிருந்த நிலையில், சவுமியா, சந்தியா, தர்ஷினி, ஐஸ்வர்யா ஆகிய  நான்கு  மாணவிகளும் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று விட்டார்கள்.

இந்நிலையில் 4 பேருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதை கண்ட குமாரி சத்தம் போட்டார் அப்போது அவ்வழியாக சென்றவர்கள் ஏரியில் இறங்கி மாணவிகளை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் ஐஸ்வர்யாவை மட்டும் ஆபத்தான நிலையில் மீட்டனர். மற்ற மூவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்ததும் கிராம மக்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியின் சேற்றில் சிக்கி பலியான மூன்று மாணவிகளின் சடலங்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.  உயிருக்கு போராடிய ஐஸ்வர்யா, அவரது தாய் குமாரி ஆகிய இருவரையும் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சவுமியா, சந்தியா,  தர்ஷினி ஆகிய மூன்று மாணவிகளின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலமாக கிடந்த தங்கள் மகள்களின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ஏரிக்கு குளிக்க சென்று 3 மாணவிகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CORONAVIRUS #TIRUVALLUR #CORONA LOCKDOWN #DROWN #LAKE