லாட்டரியில் கிடைச்ச பணத்தை வச்சு மீண்டும் லாட்டரி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டிய அதிர்ஷ்டம்.. துள்ளிக்குதித்த பெண்..!
முகப்பு > செய்திகள் > உலகம்துபாயில் வசித்துவரும் இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்திருக்கிறது. இந்த வெற்றியை அவர் அடைந்த விதம் தான் பலரையும் ஆச்சர்யப்பட செய்திருக்கிறது.
மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு டிரா எனப்படும் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த மஹ்சூஸ். இதில் பங்கேற்பவர்கள் தங்களுக்கு விருப்பமான 5 எண்களை உள்ளீடு செய்யவேண்டும். குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் 5 எண்களில் எத்தனை எண்கள் ஒத்துபோகிறதோ அதற்கு தகுந்தபடி பரிசானது கிடைக்கும். அதன்படி துபாயில் வசித்துவரும் இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு 10 மில்லியன் திர்ஹம்ஸ் தொகை (இந்திய மதிப்பில் சுமார் 22 கோடி ரூபாய்) பரிசாக கிடைத்திருக்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்தவர் இங்கேர். 42 வயதான இவர் துபாயில் உள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில், இங்கேர் சமீபத்தில் 22, 23, 25, 27, 34 ஆகிய எண்களை தனது மஹ்சூஸ் டிராவில் உள்ளீடு செய்திருக்கிறார். இதுவே அவரது வாழ்க்கையை மாற்றியமைத்திருக்கிறது.
இங்கேர் உள்ளீடு செய்திருந்த எண்களுக்கு 10 மில்லியன் திர்ஹம்ஸ் தொகை கிடைத்திருக்கிறது. சமீபத்தில் இவர் லாட்டரியில் பங்கேற்றபோது அவருக்கு 35 திர்ஹம்ஸ் மட்டுமே கிடைத்திருக்கிறது. அந்த தொகையை கொண்டு மீண்டும் லாட்டரியில் பங்கேற்ற இவருக்கு தற்போது 22 கோடி ரூபாய் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. இந்த பணத்தை கொண்டு சொந்தமாக அழகு நிலையம் ஒன்று வைக்க இருப்பதாகவும் தனது குழந்தையின் எதிர்காலத்திற்கு திட்டமிட இருப்பதாகவும் ஆனந்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி பேசிய அவர்,"எனக்கு லாட்டரியில் வெற்றி பெற்றதை ஒருவர் அறிவித்தார். யாரோ விளையாடுகிறார்கள் என்றுதான் நினைத்தேன். அதன்பிறகு எனது தோழியிடம் இதுபற்றி கூறினேன். அவர் ஆன்லைனில் இதுபற்றி பரிசோதித்தார். அப்போதுதான் எனக்கு ஜாக்பாட் அடித்தது தெரியவந்தது. இவ்வளவு பணம் பரிசாக கிடைத்தாலும் எப்போதும்போலவே எளிமையுடன் இருக்க விரும்புகிறேன்" என்றார்.