லாட்டரில ஜெயிச்ச பரிசை வாங்கப்போன 70 வயசு பாட்டிக்கு அடிச்ச அடுத்த ஜாக்பாட்.. அதிகாரிகளே ஒருநிமிஷம் ஆடிப்போய்ட்டாங்க..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் 70 வயது பாட்டி ஒருவருக்கு லாட்டரியில் அடுத்தடுத்து இரண்டு ஜாக்பாட் அடித்திருக்கிறது. இதனால் லாட்டரி நிறுவன அதிகாரிகளே அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட் விநியோகம் நடைபெற்று வருகிறது. தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க விரும்பும் நபர்கள் இந்த லாட்டரிகளை வாங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதிர்ஷ்டம் யாருக்கு எப்படி எப்போது வரும் என்பதை யார்தான் சொல்ல முடியும்? ஆனால் இப்படியும் ஜாக்பாட் ஒருவருக்கு அடிக்குமா? என கேட்க வைத்திருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த 70 வயது பெண் ஒருவர்.
அமெரிக்காவின் டெலாவர் மாகாணத்தை சேர்ந்தவர் அந்த 70 வயது பாட்டி. இவர் சமீபத்தில் நெவார்க் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது லாட்டரி டிக்கெட் ஒன்றையும் பாட்டி வாங்கியுள்ளார். அதிஷ்டவசமாக அந்த லாட்டரிக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக விழுந்திருக்கிறது. இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த அவர் தனது தோழி ஒருவருடன் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி பரிசு பணத்தை வாங்க சென்றிருக்கிறார். கையில் பணத்தை வாங்கியவுடன் குஷியான பாட்டி, அந்த தருணத்தை கொண்டாட நினைத்திருக்கிறார். இதனால் வீட்டுக்கு திரும்பும் வழியில் ஷாப்பிங் செண்டருக்கு சென்றிருக்கிறார்.
அப்போது, அங்கு மேலும் 3 லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார் பாட்டி. அங்குதான் அடுத்த இன்ப அதிர்ச்சி அவருக்கு நிகழ்ந்திருக்கிறது. அவர் வாங்கிய 3 லாட்டரி டிக்கெட்டுகளில் ஒன்றில் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் அவராலேயே இதனை நம்ப முடியவில்லை. ஆனால், அவர் வெற்றி பெற்றதை லாட்டரி நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.
இதுபற்றி பேசியுள்ள அவர்,"1 லட்சம் டாலர் வென்றதை நான் முதலில் எனது தோழியிடம் சொன்னேன். அவருடன் பரிசை வாங்க போனேன். திரும்பிவரும்போது மேலும் 3 டிக்கெட்டை வாங்கினேன். அதில் ஒன்றில் 3 லட்சம் அமெரிக்க டாலர் பரிசாக கிடைத்திருப்பதை அறிந்து நான் திகைத்துப்போனேன். என்னால் அதனை நம்பவே முடியவில்லை" எனக் கூறியுள்ளார். மேலும், அடுத்தடுத்து இரண்டு ஜாக்பாட்டை வென்ற பாட்டிக்கு லாட்டரி நிறுவன அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். தன்னுடைய பெயரை வெளிப்படுத்தவேண்டாம் என அந்த பாட்டி லாட்டரி நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.
கடந்த 7 ஆண்டுகளாக லாட்டரி வாங்கிவந்திருக்கும் இந்த பாட்டி தனது பரிசு தொகைகளை சேமிக்க இருப்பதாக சொல்லியிருக்கிறார். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு ஜாக்பாட்களை 70 வயது பாட்டி வென்றது பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

மற்ற செய்திகள்
