"நலம் நலமறிய ஆவல்..".. இது நட்புக்கோட்டை.. 5000 மைல் கடந்தும் லெட்டரிலேயே நட்பை வளர்த்த பால்ய நண்பர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்84 வருடங்களாக கடிதம் மூலமாகவே பேசிவந்த இரு வயதான நண்பர்கள் முதல்முறை வீடியோ காலில் சந்தித்து உரையாடியிருக்கின்றனர். இதனை அவர்களது குடும்பத்தினர் சாத்தியமாக்கியதாக இருவரும் நெகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

பொதுவாகவே சிறுவயதில் நண்பர்களாக இருந்தவர்கள் மட்டுமே வாழ்வின் கடைசி நேரம் வரையிலும் உடன் வருவதுண்டு. வாழ்க்கையின் அனைத்து காரியங்கள் குறித்தும் நண்பர்களிடையே விவாதித்தும், ஆலோசனை பெறவும், மனம் விட்டு பேசவும் பலரும் விரும்புவது உண்டு. இத்தகைய நண்பர்களுக்கு தொலைவு ஒரு பொருட்டே இல்லை. இன்றைய காலகட்டத்தில் நினைத்த நேரத்தில் உலகின் மற்றொரு பகுதியில் இருப்பவரோடு கூட நம்மால் ஒரு போன் கால் மூலம் பேசிவிட முடியும். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஏதுமில்லாத காலத்தை சேர்ந்த இருவர், கடிதம் மூலமாகவே தங்களது நட்பை வளர்த்து வந்திருக்கின்றனர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் செலஸ்டா பைரன். இங்கிலாந்தின் டிவோன் பகுதியை சேர்ந்தவர் ஜெஃப் பேங்ஸ். 1938 ஆம் ஆண்டு அமெரிக்க மற்றும் இங்கிலாந்து மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்டம் நடைபெற்றது. அப்போது கடிதம் மூலமாக இருவரும் நண்பர்களாகியுள்ளனர். அப்போது துவங்கி, இருவரது நட்பும் வளர துவங்கியிருக்கிறது.
இரண்டாம் உலகப்போர், அமெரிக்க - ஐரோப்பிய அரசியல் சூழ்நிலை என இருவரும் பேசிக்கொள்ளாத விஷயங்களே கிடையாது. இருவருக்கும் தனித்தனியே திருமணமாகி வாழ்க்கை வெவ்வேறு பரிமாணங்கள் எடுத்தபோதிலும் ஒருவருக்கு ஒருவர் கடிதம் எழுதுவதை மட்டும் கைவிடவே இல்லை. பின்னர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மெயில் அனுப்பி வந்திருக்கின்றனர். பேங்ஸ்-ன் மனைவி கடந்த 2011 ஆம் ஆண்டு மரணமடைந்திருக்கிறார். தற்போது பேர குழந்தைகளுடன் வசித்துவரும் இருவரும் கடந்த 2002 ஆம் ஆண்டு முதன் முறையாக சந்தித்திருக்கின்றனர்.
இந்நிலையில், இருவரது குடும்பத்தினரும் ஒரு சர்ப்ரைஸ் மீட்டிங்கிற்கு முடிவெடுத்திருக்கின்றனர். அதாவது வீடியோ காலில் பைரன் - பேங்க்ஸை சந்திக்க செய்வது என முடிவெடுத்து அதன்படி, பல வருடங்கள் கழித்து வீடியோ காலில் ஒருவரையொருவர் சந்தித்திருக்கின்றனர்.
நீண்ட காலமாக கடிதம் வாயிலாகவே பேசிவந்த இருவரும் வீடியோ காலில் சந்தித்துக்கொள்ள ஒருவரையொருவர் அன்புடன் விசாரித்துக்கொண்டனர். உடல்நிலை, குடும்பத்தினர் பற்றியும் ஒருவரையொருவர் பாசத்துடன் விசாரித்திருக்கின்றனர். இது இருவரது குடும்பத்தினரையும் நெகிழ செய்திருக்கிறது. இருவரது 100-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மற்ற செய்திகள்
