'சீனாவ அப்படி எல்லாம் சும்மா விட மாட்டேன்'... 'என்கிட்ட டாலர் இருக்கு'... 'டிரம்ப் கொளுத்திய வெடி'... இது எங்க போய் முடிய போகுதோ!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டம் காண வைத்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவில் கொரோனா கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். அமெரிக்க வரலாற்றில் நடக்காத இந்த பேரழிவினால் அமெரிக்கப் பொருளாதாரம் கடுமையாகச் சரிந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் கொரோனா பரவ சீனா தான் காரணம் என, அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அதோடு சீனாவின் மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் நிருபர்களிடம் பேசினார்.
அப்போது நிருபர் ஒருவர், ''கொரோனா வைரசுக்குத் தண்டனையாக அமெரிக்கா தனது கடன் கடமைகளைச் சீனாவுக்குச் செலுத்தக்கூடாது என்று கருதுகிறதா?'' என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு அதிரடியாகப் பதில் அளித்த டிரம்ப், ''கடன் ரத்து என்பது ஒரு ஆபத்தான விளையாட்டு. அது அமெரிக்காவின் புனிதத் தன்மையைக் கெடுத்து விடும். ஆனால் அதற்குப் பதில் என்னிடம் வேறு ஐடியா இருக்கிறது. அது தான், ''வரி விதிப்பு''. அவர்களுக்கு புதிய வரிகளை விதிப்பதின் மூலம் இழப்பைச் சரி செய்யலாம்'' என டிரம்ப் கூறினார்.
இதன் மூலம் டிரம்ப் என்ன நடவடிக்கை எடுப்பார் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. இதற்கிடையே அமெரிக்காவின் நட்பு நாடுகளான, ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்குச் சீனாவிடம் இழப்பீடு கோரும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருவது குறித்தும், நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்குப் பதிலளித்த டிரம்ப், ''இழப்பீடு மூலம் கிடைக்கும் தொகையை விட நான் எடுக்கப் போகும் நடவடிக்கை மூலம் அதிக தொகையைப் பெற முடியும். அதிக வரிகள் விதிப்பதன் மூலம், 1 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.75 லட்சம் கோடி) அளவில் அதைச் செய்ய முடியும். ஏனென்றால் நம்மிடம் டாலர் உள்ளது. அதை யாரும் மறந்து விட வேண்டாம். அதுதான் உலகிலேயே மிகப்பெரிய பணம். அது வலுவடைந்துள்ளது. நம்மிடம் வலுவான டாலர் இருக்கிறது'' என டிரம்ப் அதிரடியாகக் கூறியுள்ளார்.
டிரம்ப் தற்போது தொடங்கியுள்ள இந்த அதிரடி ஒரு சிறு ஆரம்பம் தான். இன்னும் பல அதிரடி நடவடிக்கைகளைச் சர்வதேச அளவில் எதிர்பார்க்கலாம் என, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.