அமெரிக்க வரலாற்றிலேயே இதுதான் ‘முதல்முறை’.. சொந்த கட்சியினரே வைத்த ‘ட்விஸ்ட்’.. டிரம்பை துரத்தும் துயரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க வரலாற்றிலேயே முதல்முறையாக அதிபர் ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 2-வது முறையாக நிறைவேறியுள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக, கடந்த 6ம் தேதி நாடாளுமன்றம் கூடியது. அப்போது அங்கு புகுந்த டிரம்பின் ஆதரவாளர்கள், வரலாற்றில் இல்லாத அளவிற்கு வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர்.
இதனை அடுத்து டிரம்பை அதிபர் பதவியில் இருந்து நீக்கம் செய்யும் வகையில், அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 232 எம்.பி.க்கள் பதவிநீக்கத்தை ஆதரித்து வாக்களித்தனர். அதில் டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 10 பேரும் அவருக்கு எதிராக வாக்களித்தனர்.
இதன்மூலம் அமெரிக்க அதிபர் வரலாற்றில் இருமுறை தகுதி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டிருக்கும் முதல் அதிபர் என்ற பெயரை டிரம்ப் பெற்றுள்ளார். தகுதி நீக்க தீர்மானம் நிறைவேறியுள்ளதால், செனட் அவையில் டிரம்ப் மீது விசாரணை நடைபெறுகிறது. அங்கு டிரம்ப் மீதான குற்றத்தை உறுதி செய்ய, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது. இதனால் செனட் சபையில் குறைந்தது 17 குடியரசுக் கட்சியினர் டிரம்புக்கு எதிராக வாக்களித்தால், அவர் முழுமையாக பதவிநீக்கம் செய்யப்படுவார்.
இதற்கு 20 குடியரசுக் கட்சி செனட்டர்கள் தயாராக இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு பதவி நீக்கம் செய்தால் இதன்பிறகு டிரம்ப் பொது பதவியில் அமர முடியாது. வரும் 2024ம் ஆண்டு மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், அவரை மீண்டும் போட்டியிடவிடாமல் தடுப்பதற்கு இந்த பதவிநீக்கம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. டிரம்ப் வரும் 20ம் தேதி பதவியில் இருந்து விலக உள்ள நிலையில் இந்த பதவிநீக்க முன்னெடுப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
