'நல்லா போய்ட்டு இருந்துது'... 'திடீரென அதிகரித்த கொரோனாவால்'... 'பிரபல நிறுவனம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை?!!'... 'கவலையில் ஊழியர்கள்!!!...
முகப்பு > செய்திகள் > உலகம்தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் ஆப்பிள் நிறுவனம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

உலகையே ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்டுள்ள கொரோனாவால் அதிக பாதிப்புகளைச் சந்தித்து வரும் நாடான அமெரிக்காவில் முதல் அலை, இரண்டாவது அலையைக் கடந்து தற்போது கொரோனா வைரசின் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து அதிவேகத்தில் பரவி வரும் கொரோனாவால் மீண்டும் அங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் முக்கிய மாகாணமான கலிபோர்னியாவில், நோயாளிகளுக்கு ஐசியூ படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படுமளவுக்கு திடீரென பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 2 வாரங்கள் முன்பு கலிபோர்னியாவில் லாக்டவுன் நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், கலிபோர்னியாவை சுற்றியுள்ள சில்லறை வர்த்தக கடைகளை ஆப்பிள் நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது. அங்கு தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அதன் வலைதளத்தில், கலிப்போர்னியாவில் உள்ள 53 சில்லறை வர்த்தக கடைகளை தற்காலிகமாக மூடியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் மற்றொரு முக்கிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியிலும் சில்லறை வர்த்தக கடைகள் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர சான் பிரான்ஸிஸ்கோவிலும் சில கடைகளை மூடியுள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தாலும், மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
இதில் மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், பண்டிகை காலமான தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13, புதிய ஐபேடுகள் மற்றும் புதிய ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளதால், சமீபமாக விற்பனை களைகட்டிய நிலையில், இந்த மூடல் நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் விற்பனை மீண்டும் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் விரைவில் அவை செயல்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
