‘என் 40 வருச சர்வீஸ்ல இப்படி பார்த்ததே இல்ல’.. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தால் வந்த வினை.. நொறுங்கிப்போன அமெரிக்க மக்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் உடலை புதைக்க இடமில்லாமல் கல்லறைகளில் மனித உடல்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இதில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது அமெரிக்காவில்தான். இதுவரை 3.50 லட்சம் அதிகமான மக்கள் கொரோனாவில் உயிரிழந்துள்ளனர், 2 கோடிக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதும், ஆயிரக்கணக்கனோர் உயிரிழப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கலிபோர்னியாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களை புதைக்க கல்லறைகளில் இடமில்லாமல் மனித உடல்கள் நாள்கணக்கில் காத்திருக்கும் அவலம் நிகழ்ந்துள்ளது.
லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள கல்லறை ஒன்றின் உரிமையாளர் மாக்டா மால்டோனாடோ கூறுகையில், ‘நான் கடந்த 40 வருடங்களாக இறுதிச்சடங்கு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். என் வாழ்க்கையில் இதுபோன்ற சூழலை நான் பார்த்ததே இல்லை. கொரோனாவினால் உயிரிழக்கும் உடல்களை என்னால் புதைக்க முடியாத அளவுக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. பலரிடம் உடலை எடுத்துச் செல்லுங்கள் கல்லறையில் இடமில்லை, உங்கள் குடும்ப உறுப்பினரை புதைக்க இடமில்லை என்று சொல்வதற்கு மன்னிக்க வேண்டும் என சொல்லி வருகிறேன்.
நாள்தோறும் சுமார் 30 உடல்களை கல்லறை அடுக்குகளில் இருந்து எடுத்து புதிய உடல்களை வைக்கிறேன். வழக்கமாக செய்யும் பணியைவிட இது 6 மடங்கு அதிகமாகும். எங்களுக்கு வேறவழி தெரியாமல் மனித உடல்களை குளிர்பதனப்பெட்டியில் வைத்திருக்கிறோம். இதற்காக 15 குளிர்பதனப்பெட்டியை கூடுதலாக வாடகைக்கு எடுத்திருக்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் மட்டும் கொரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவில் சராசரியாக நாள்தோறும் 2,500 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தின் காரணமாக தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.