அமெரிக்காவில் விமான கண்காட்சி.. சாகசம் செய்யும் போது மோதி வெடித்து சிதறிய போர் விமானங்கள்.. நெஞ்சை பதைபதைக்கும் சம்பவம்
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் சனிக்கிழமையன்று டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் எக்ஸிகியூட்டிவ் விமான நிலையத்தில் விமான கண்காட்சி நடந்தது.
விமான சாகச கண்காட்சியில் வானில் சாகசம் செய்யும் போது இரண்டு (போயிங் பி-17 மற்றும் ஒரு சிறிய விமானம் பெல் P-63 கிங்கோப்ரா) விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்ட நிகழ்வு பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
போயிங் விமானம் உடனடியாக தரையில் விழுந்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் 6 பேர், இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்காட்சியில் கலந்துகொண்டவர்களால் படம் பிடிக்கப்பட்ட இந்த விமான மோதல் வீடியோ காட்சிகளில் பெரிய B-17 விமானம் தரையில் இருந்து சற்று உயரமாக , ஒரு நேர் கோட்டில் பறக்கிறது, அதே நேரத்தில் சிறிய விமானம் - பெல் P-63 கிங்கோப்ரா, இடதுபுறத்தில் இருந்து பெரிய விமானத்தின் திசையை நோக்கி பறந்து வருகிறது. கண் இமைக்கும் நேரத்தில் இரண்டு விமானங்களும் மோதி கொள்கின்றன.
மோதலின் காரணமாக உடனடியாக இரண்டு விமானங்களும் தரையில் சிதறி விழுந்தன. பெரிய விமானத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் எரிபொருள் பற்றி எரிந்து வெடிக்கும் காட்சிகளும் அங்கு கண்காட்சியில் கூடியிருந்த மக்களை பதைபதைக்க வைத்துள்ளது.
டல்லாஸ் எக்ஸிகியூட்டிவ் விமான நிலையத்தில் விங்ஸ் ஓவர் டல்லாஸ் ஏர்ஷோவின் போது இந்த மோதல் ஏற்பட்டது.
அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) & தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளனர்.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிரான வான்வழிப் போரில் வெற்றி பெற்றதில் இந்த நான்கு எஞ்சின் கொண்ட குண்டுவீச்சு போர் விமானமான பி-17 பெரும் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. P-63 கிங்கோப்ரா என்பது அதே போரின் போது உருவாக்கப்பட்ட ஒரு போர் விமானமாகும்.