'கொரோனா' பாதிப்பிற்கான 6 'புதிய' அறிகுறிகள்... 'அமெரிக்க' நோய்த்தடுப்பு மையம் வெளியிட்டுள்ள 'தகவல்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 28, 2020 12:55 PM

கொரோனா பாதிப்பு இருப்பதற்கான புதிய அறிகுறிகளை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி கண்டறிந்துள்ளது.

US Corona Chills Headache Muscle pain CDC Adds 6 New Symptoms

கொரோனா பாதிப்பு பெரும்பாலான உலக நாடுகளை புரட்டி போட்டு வரும் நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக நடத்தப்பட்டுவரும் ஆய்வுகளில் தினம்தினம் புதுப்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி நடத்திய ஆய்வில் கொரோனா பாதிப்பு இருப்பதற்கான 6 புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு இருப்பவர்களுக்கு லேசானது முதல் தீவிரமான அறிகுறிகள் தென்படும் எனவும், வைரஸ் தாக்கிய பின்னர் இந்த அறிகுறிகள் 2 முதல் 14 நாட்களுக்குப் பிறகு தெரியத் தொடங்கும் எனவும் சிடிசி இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. காரணமின்றி உடல் குளிர்வது போன்று உணர்தல், காரணமின்றி உடல் குளிர்ச்சியுடன் நடுங்க ஆரம்பித்தல்,  கடுமையான வேலை செய்யாத நிலையிலும் தசை வலி ஏற்படுதல், திடீரென தோன்றும் தலைவலி, சுவை மற்றும் வாசனை உணர்வு குறைந்துபோதல் ஆகியவையே சிடிசி கண்டறிந்துள்ள புதிய அறிகுறிகள் ஆகும்.

ஆனால் கொரோனா பாதிப்பிருந்தால் இந்த அறிகுறிகள் மட்டும்தான் வரும் என சொல்ல முடியாது எனவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மருத்துவமனையை அணுகி தெளிவு பெற வேண்டும் எனவும் சிடிசி கூறியுள்ளது. முன்னதாக உலக சுகாதார அமைப்பானது, காய்ச்சல், வறட்டு இருமல், உடல் சோர்வு, உடல் வலி, மூக்கடைப்பு, மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப் போக்கு, தொண்டை வறட்சி ஆகியவற்றை கொரோனா வைரஸ் அறிகுறிகள் எனத் தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.