‘உலகமே கொரோனாவ கட்டுப்படுத்த ஓடிட்டு இருக்கு’.. ‘ரகசியமாக’ சீனா பார்க்கும் வேலை.. கொந்தளித்த உலகநாடுகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனா ரகசியமாக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் ஆயுதக்கட்டுபாட்டு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் தொடங்கி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் சீனா ரகசியமாக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 1996ம் ஆண்டு அணு ஆயுதங்களை உருவாக்கி அதன் மூலம் போட்டி ஏற்படாமல் இருக்க அமெரிக்க, சீனா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுத சோதனைகள் தடை ஒப்பந்தத்தில் இணைந்தன. இந்த ஒப்பந்தம் பெரும்பாலான நாடுகளால் கடைபிடிக்கப்படாமல் உள்ளது. ஆனால் சீனா இந்த தடை ஒப்பந்தத்தை பின்பற்றி வருவதாக கூறி வருகிறது.
இந்நிலையில் ஜின்ஜியாங் மாகாணத்தில் அணு ஆயுத சோதனை தளமாக உள்ள லோப் நூர் பகுதியில் சீன அரசு கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. அங்கு நடைபெறும் அணு ஆயுத சோதனையின் போது அதிர்வுகள் வெளியே வராத அளவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு ரகசியமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதேபோல் வடகொரியாவும் ஒருபக்கம் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. உலகமே கொரோனா கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில் சீனா ரகசியமாக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வரும் செயல் உலக நாடுகளை ஆத்திரமடைய வைத்துள்ளது.
