‘தமிழகத்திலும்’... ‘கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா சிகிச்சை?’... ‘அமைச்சர் விஜயபாஸ்கர் தந்த அதிரடி பதில்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

பிளாஸ்மா சிகிச்சை என்பது வைரஸ் நோய் தாக்கியவர்களிடம் இருந்து பெறப்படும் எதிர்ப்பு அணுக்கள் சிகிச்சை முறையாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு நன்றாக குணம் அடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பி.லிம்போ சைட் செல்களில் ஒருவித நோய் எதிர்ப்பு சக்தி திரவம் சுரக்கும். அந்த திரவத்தை தனியாக பிரித்து எடுத்தால் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் அணுக்கள் கிடைக்கும்.
இந்த நோய் எதிர்ப்பு பிளாஸ்மாவை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்தினால் மூன்றே நாட்களில் குணமாகி விடுவார்கள். கேரள மாநில அரசு இந்த சிகிச்சை முறையை மேற்கொள்ள இந்திய மருத்துவ கவுன்சிலிடம் நாட்டிலேயே முதல் மாநிலமாக அனுமதிப்பெற்று, சோதனை செய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் இந்த முறை மேற்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்கப்பட்டபோது, ‘பிளாஸ்மா சிகிச்சைக்கு டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடமும், மருந்து கட்டுப்பாட்டு கழகத்திலும் அனுமதி கேட்டு தமிழகத்தின் சார்பிலும் விண்ணப்பித்துள்ளோம். அவர்களின் அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படும். மேலும், பிளாஸ்மா சிகிச்சைக்கு ரத்தத்தை பிரித்து எடுக்கக்கூடிய கருவி தேவைப்படுகிறது. அதை வாங்கி அரசு மருத்துவமனைகளுக்கு கொடுக்க இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
