இந்த வருஷத்தின் மிகப்பெரிய புயல்.. மணிக்கு 270 கிலோமீட்டர் வேகத்துல காற்று வீசும்.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்.. முழுவிபரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த வருடத்தின் மிகப்பெரிய புயல் இந்த வார இறுதியில் ஜப்பானை தாக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
Also Read | மதங்களை கடந்து ஒன்றிணைந்த மக்கள்.. களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா.. கர்நாடகாவில் சுவாரஸ்யம்..!
மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு Super Typhoon Hinnamnor எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த புயல் பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மிகப்பெரிய அளவில் சேதத்தினை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். இதன் காரணமாக அந்தந்த நாட்டு அரசுகள் மக்களுக்கு எச்சரிக்கைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், இந்த புயல் கரையை கடக்கும் நேரத்தில் அதிவேகமாக காற்று வீசும் என்பதால் உலக அளவில் இந்த ஆண்டின் மிகப்பெரிய புயலாக இது இருக்கும் என அறிவித்திருக்கிறார்கள் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்.
Super Typhoon Hinnamnor
தற்போது தென்மேற்கு ஜப்பானின் ஒகினாவாவிற்கு கிழக்கே பல நூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ள சூப்பர் டைபூன் ஹின்னம்னோர், இந்த வார இறுதியில் ஜப்பானிய தீவுகளை கடக்கும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தற்போது புயலின் மையத்தில் மணிக்கு 190 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிவருவதாக தெரிவித்திருக்கும் ஜப்பான் வானிலை ஆய்வுமையம், புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 270 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் என கணித்திருக்கிறது. இதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதிவேக காற்று
ஒகினாவா பிராந்தியத்தில் ஏற்கனவே கடுமையான காற்று வீசிவருவதால் ஜப்பான் ஏர்லைன்ஸ் இன்று 8 விமான சேவைகளுக்கு தடை விதித்திருக்கிறது. புதன்கிழமை அதிகாலையில் டைடோஜிமா பகுதியில் பலத்த காற்று வீசியிருக்கிறது. உள்ளூர் விமான நிலையத்தில் மணிக்கு 174 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதேபோல, டைடோஜிமா கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் மக்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனர்.
இந்த வார இறுதியில் கரைக்கு அருகே புயல் நிலைகொண்டு மீண்டும் வடக்கு புறமாக நகரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தைவான், சீனா வழியாக பயணிக்கும் இந்த புயல் கொரிய தீபகற்பத்தில் கரையைக் கடக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த வருடத்தின் மிகப்பெரிய புயலான Super Typhoon Hinnamnor -ன் காரணமாக பல ஆசிய நாடுகள் பதற்றத்தில் இருக்கின்றன.