மதங்களை கடந்து ஒன்றிணைந்த மக்கள்.. களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா.. கர்நாடகாவில் சுவாரஸ்யம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகாவில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் உள்ளூர் முஸ்லீம் மக்கள் திரளாக கலந்துகொண்டது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
விநாயகர் சதுர்த்தி
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்திக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் விமரிசையாக நடைபெறும் இந்த விழா 10 நாட்களுக்கு நீடிக்கும். அதன் பிறகு விநாயகர் சிலையானது நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
பொதுவாக விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பெரும்பாலான வீடுகளில் சிறிய வடிவிலான மண் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கமாகும். அதன் பிறகு அருகில் உள்ள நீர்நிலைகளில் அதனை கரைப்பது வழக்கம். சிலர் தங்கள் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெரிய வடிவிலான விநாயகர் சிலைகள் கரைக்க கொண்டு செல்லும் போது, அந்த வாகனங்களில் தங்களது விநாயகர் சிலைகளையும் சேர்த்து அனுப்புவார்கள்.
ஒற்றுமை
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் நேற்று துவங்கிய விநாயகர் சதுர்த்தி விழாவில் உள்ளூர் இஸ்லாமிய மக்கள் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டிருக்கிறது. இது பலரையும் நெகிழ செய்திருக்கிறது. கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தின் பீடி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா பெரும் கோலாகலமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. முஸ்லீம் மக்கள் அதிகளவில் வசித்துவரும் இப்பகுதியில் நேற்று உள்ளூர் இந்து மக்கள் விநாயகர் சிலையை நிறுவி வழிபாடு நடத்தியிருக்கின்றனர். இதில் கலந்துகொள்ள உள்ளூர் முஸ்லீம் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அழைப்பை ஏற்ற இஸ்லாமிய மக்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
முன்னதாக, கர்நாடக மாநிலம் ஹுப்பாலியில் உள்ள இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பாக சிக்கல் எழுந்தது. இந்நிலையில், மாண்டியா மாவட்டத்தில் மதங்களை கடந்து விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் திரளாக கலந்துகொண்டது ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக அமைந்திருப்பதாக அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.
Also Read | விண்வெளியில் விளைந்த அரிசி.. சாதித்து காட்டிய சீன விஞ்ஞானிகள்.. வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்!!