'நீங்க மன்னர் ட்ரம்ப் இல்ல... அதிபர் ட்ரம்ப் தான்!'... கடுப்பான கவர்னர்கள்!.. லாக் டவுன் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!.. ட்ரம்ப்-இன் நிலைப்பாடு 'இது' தான்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Apr 15, 2020 04:04 PM

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அதிபர் ட்ரம்ப்புக்கும் மாகாண கவர்னர்களுக்கும் இடையே மோதல் வலுத்துவருகிறது.

power battle between trump and governors regarding lockdown

வரும் நவம்பரில் கடினமான அதிபர் தேர்தலை இரண்டாம் முறையாக எதிர்கொள்ளும் ட்ரம்ப், அதற்கு அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் தன் வழிக்குத் திரும்பினால்தான் உண்டு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

ஆனால் டாக்டர் ஃபாஸி மார்ச் மாதம் கூறியது போல் கொரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்தை கடப்பதை நோக்கி அதிபர் ட்ரம்ப்பின் முடிவு செல்கிறது என்று அங்கு மருத்துவ நிபுணர்கள், உலகச் சுகாதார அமைப்பு ஆகியவை எச்சரித்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறையாமல் முன் கூட்டியே சந்தைகளைத் திறப்பதற்கு பல மாகாண கவர்னர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ட்ரம்ப், தனக்குத்தான் முழு அதிகாரம் என்று சூளுரைத்தார்.

அப்போதுதான் ட்ரம்ப் 'முழு அதிகாரம் எனக்குத்தான்' என்று சூளுரைக்க, அதற்கு நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ 'மன்னர் ட்ரம்ப் அல்ல, அதிபர் ட்ரம்ப்தான்' என்று சாடியுள்ளார்.

இதனையடுத்து தன் 'முழு அதிகார' சூளுரையிலிருந்து பின் வாங்கிய அதிபர் ட்ரம்ப், "எந்த கவர்னர் மீதும் சந்தைகளைத் திறக்க அழுத்தம் கொடுக்கப்போவதில்லை" என்று பல்டி அடித்துள்ளார்.

மீண்டும் சந்தைகளைத் திறக்க புதிய பணிக்குழு ஒன்றை அவர் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "நம் நாடு திறக்கப்பட வேண்டும், திறக்கப்படும்" என்று ட்ரம்ப் பேசி வருகிறார்.

லாக் டவுனில் இருந்து முழுமையாக திறப்பதா அல்லது சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு கொஞ்சம் கொஞ்சமாக சந்தைகளைத் திறப்பதா என்பதில் ட்ரம்ப் தடுமாறி வருகிறார், இதற்காகத்தான் அவர் தொழிலதிபர்களுடன் வீடியோ கான்பரன்சிங் நடத்தவிருக்கிறார்.

ஒரு புறம் தேர்தல் இன்னொரு புறம் கொரோனா; இரண்டுக்கும் இடையே பொருளாதாரம், சந்தைகளைத் திறந்தால் நிச்சயம் இரண்டாம் அலை தொற்று அடித்தால் அமெரிக்கா சுடுகாடாகி விடும் என்ற எச்சரிக்கையை ட்ரம்ப் வேண்டா வெறுப்பாகவே ஏற்றுக் கொண்டு வருகிறார்.

அதிபர் ட்ரம்ப்பின் இத்தகைய நிலைப்பாடுகளை ஏற்காத கலிபோர்னியா, நியூயார்க் ஜனநாயகக் கட்சி கவர்னர்கள் தங்களுக்கென்றே பிரத்யேகமாக லாக்-டவுன் கட்டுப்பாட்டு தளர்வுகளுக்கான திட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

கலிபோர்னியா கவர்னர் கேவின் நியுசம் கூறும் போது, "மக்கள் உயிரைப் பணயம் வைக்கும் முடிவுகளை நான் எடுக்க மாட்டேன், நம்மைக் கடந்து நாம் யோசிக்கக் கூடாது, சீக்கிரமே திறந்து பொருளாதாரத்தை இன்னமும் சிக்கலில் ஆழ்த்த விரும்பவில்லை" என்றார்.

நியூயார்க் கவர்னர் கியூமோ இன்னும் சற்று காட்டமாகவே, "என் மாகாண மக்களின் ஆரோக்கியத்தை அபாயத்திற்குள்ளாக்கும் விஷயத்தை செய்ய உத்தரவிடுபவர் அதிபராகவே இருந்தாலும் கவலையில்லை, செய்ய மாட்டேன்" என்று சாடினார்.

அதிபர் ட்ரம்பும் இதற்கு, பதிலடியாக, "பழைய பாணி கலகம் எப்போதும் பார்க்க உற்சாகமானது நம்மை மேலும் வீரியம் கொள்ள வைக்கும் குறிப்பாக கலகக்காரர்களுகு கேப்டனிடமிருந்து அதிகம் தேவைப்படும்போது" என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.