‘மீண்டும் மோடியே பிரதமரா வரணும்’.. பிரியப்படும் பாக்., பிரதமர்.. ஏன் அப்படி சொன்னாரு?
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Apr 10, 2019 12:25 PM
பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்று தான் நினைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளது பெரும் சலசலப்பையும் கவன ஈர்ப்பையும் உருவாக்கியுள்ளது.

அண்மையில் புல்வாமா தாக்குதலில் தொடங்கி, ராணுவ விமானி அபிநந்தனின் விடுதலை வரையிலான தொடர் சம்பவங்கள் இந்தியா - பாகிஸ்தானின் உறவில் பெரும் பதற்றத்தை அதிகரித்தன. ஆனால் கடைசி தருவாயில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தான் இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்புவதாகக் கூறி அபிநந்தனை விடுவிப்பதாகத் தெரிவித்தார். அவ்வாறே அபிநந்தனை விடுதலையும் செய்தார்.
இந்நிலையில் இந்தியாவில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால்தான், இந்தியா- பாகிஸ்தான் - காஷ்மீர் பிரச்சனைகளுக்கான நேரடியான குறைந்தபட்ச தீர்வினை எடுக்க ஏதுவாக இருக்கும். மாறாக, வலதுசாரி பாஜக எதிர்க்கட்சி ஆகிவிட்டால், காங்கிரஸ் போன்ற ஆளுங்கட்சிகளின் தீர்மானத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குரல் அழுத்தமாக இருக்கும் என்று கணிப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் இம்ரான் கான் கூறியுள்ளார்.
மேலும் பேசிய இம்ரான் கான், இந்தியாவில் இதுவரை மகிழ்ச்சியாக இருந்த முஸ்லீம்கள், தற்போது அதிகப்படியான இந்து தேசியவாத உணர்வினால் முஸ்லீம்கள் கவலையுறுவதாகவும் இஸ்ரேல் பிரதமர் நெதனாயு போன்று பயம் மற்றும் தேசிய உணர்வுகளையே தனது பிரச்சாரக் கூறுகளாகக் கொண்டு மோடி இயங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிற மாநிலத்த்தைச் சேர்ந்தவர்கள், காஷ்மீரில் சொத்துக்களை வாங்குவதை தடைசெய்யும் வகையில் இருக்கும் காஷ்மீர் சிறப்பு உரிமைகள் சட்டம் ரத்து செய்யப்படும் என்கிற பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை நினைவூட்டிய இம்ரான் கான் இதுவும் பிரச்சாரமாக இருக்கலாம் என்று கருதுவதாக குற்றம் சாட்டியதோடு, ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் அமைதியாக உறவு பேணுவதன் மூலமே, பாகிஸ்தானின் ஏழைமக்களை ஏழ்மையில் இருந்து விடுவிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
