நதிகள் இணைப்பு: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி.. நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 09, 2019 04:19 PM

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு குறித்து தெரிவித்துள்ளதை வரவேற்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

actor rajinikanth clarifies about his political stand once again

சென்னையில் தனது இல்லத்தில்  நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான  கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலில் ஆதரவு கேட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், 'எனது அரசியல் நிலைப்பாடு பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன். அதில் மாற்றம் கிடையாது. இதனைப் பெரிதுபடுத்தி, அவருடனான நட்பை கெடுத்துவிட வேண்டாம்' என தெரிவித்தார்.

மேலும், 'பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை நேற்று வெளிவந்துள்ளது. அதில் நதிகள் இணைப்பிற்கு ஆணையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது என்றார் நடிகர் ரஜினிகாந்த். நதிகள் இணைப்பு குறித்து நான் ஏற்கனவே பேசியுள்ளேன். இது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத் திட்டம். அவர் பிரதமராக இருந்தபோது அவரிடம் இதுக் குறித்து பேசியுள்ளேன். நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு பகீரத யோஜனா என பெயர் வைக்கலாம்' என அவரிடம் கூறினேன் என்றார்.

'மக்கள் என்ன முடிவு எடுக்க போகின்றனர் என்பது தெரியவில்லை. மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால், முதலில் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நதிகள் இணைக்கப்பட்டால், பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும். வறுமை ஒழிந்து, வேலைவாய்ப்பு அதிகரிக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். இது தேர்தல் நேரம். முக்கியமான நேரம். இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை' என்று அவர் கூறினார்.

இதனிடையே எட்டு வழிச்சாலை திட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு பதில் அளிக்காமல் நடிகர் ரஜினிகாந்த் அங்கிருந்து சென்றுவிட்டார். நாளை மறுநாள் வியாழக்கிழமையன்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது முழுமையான செய்தியாளர் சந்திப்பை இங்கே காணலாம்...

Tags : #RAJINIKANTH #LOKSABHAELECTIONS2019 #BJP #RIVER #MANIFESTO #KAMAL #MNM #PROJECT