சீறி ஓடிய காட்டாற்று வெள்ளம்.. சிக்கியவர்களை நீரில் குதித்து காப்பாற்றி ஹீரோவான வாலிபர்.. இதயம் வென்ற வீடியோ
முகப்பு > செய்திகள் > உலகம்காட்டாறு வெள்ளம் ஒன்றில், இரண்டு சிறுவர்கள் சிக்கிக் கொண்ட நிலையில், அதன் பின்னர் நடந்த திக் திக் நிமிடங்கள் தொடர்பான வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "ப்பா.. என்ன இது இப்டி இருக்கு?!.." வாயை பிளந்த மீனவர்கள்.. "100 வருஷத்துக்கு மேல வாழ்ந்துட்டு இருக்காம்.."
ஓமன் நாட்டின் பஹ்லா நகரில், பெரும்பாலும் மலைப்பகுதி மீது, பள்ள வாக்கில் நிறைய குடியிருப்புகள் அமைந்துள்ளது. மேலும், இப்பகுதிகளில் கோடை மழையின் காரணமாக திடீரென வெள்ளம் உருவாகும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அரசும் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், அப்பகுதியில் வந்து காட்டாற்று வெள்ளத்தை இரண்டு சிறுவர்கள், வேடிக்கை பார்த்தபடி நின்றுள்ளனர்.
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுவர்கள்
அப்போது தான், திடீரென அந்த சிறுவர்கள் நின்று கொண்டிருந்த பகுதியிலும் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து கொண்டுள்ளது. இதனால், சிறுவர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல், அதிர்ந்து போய் நின்றுள்ளனர். மேலும், நீரிலிருந்து அசைய முடியாமலும், அசைந்தால் இழுத்துச் சென்று விடுமோ என்ற பயத்திலும் அவர்கள் ஒரே இடத்தில் நிற்கின்றனர்.
ஹீரோவாக மாறிய இளைஞர்
இந்த வேளையில், கரையில் இருந்த அலி பின் நசீர், அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர், இரண்டு சிறுவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக, கயிறு ஒன்றைக் கட்டிக் கொண்ட படி, காட்டாற்று வெள்ளத்தில் குதித்தார் அலி பின் நசீர். கரையில் இருந்த அவரின் தந்தை மற்றும் சகோதரர் கயிறை இறுக்கமாக பிடித்துக் கொண்டனர்.
ஒரு பக்கம், காட்டாற்று வெள்ளம் அதிவேகமாக சென்று கொண்டிருக்க, அந்த எதிர்ப்பை மீறி மெல்ல மெல்ல குழந்தைகள் அருகே சென்று விட்டார் நசீர். அருகே அவர் வந்ததும் கட்டி அணைத்துக் கொண்ட சிறுவர்கள், கண்ணீர் வடிக்கத் தொடங்கி உள்ளனர். இதன் பின்னர், மெல்ல மெல்ல நீரின் எதிர்ப்பை மீறி, கரைக்கு அருகே நெருங்க தொடங்கினார் நசீர். பின்னர், அங்கிருந்தவர்கள் கயிறை பயன்படுத்தி, மூன்று பேரையும் மீட்டுள்ளனர்.
பாராட்டும் நெட்டிசன்கள்
குழந்தைகளுக்காக காட்டாற்று வெள்ளத்தில் குதித்த அலி, அவர்களை கரைக்கு மீட்டுக் கொண்டு வரும் வரை, அங்கு கடும் பரபரப்பும், அதிர்ச்சியும் மட்டும் தான் நிரம்பி இருந்தது. சிறுவர்களைக் காப்பாற்றி விட்டு வந்த பிறகு தான், அங்கிருந்த அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.
இறுதியில், கண்ணீருடன் சிறுவர்களைக் காப்பாற்றியதற்காக இறைவனுக்கு நன்றியும் சொன்னார் அலி பின் நசீர். காட்டாற்று வெள்ளத்தில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற அலி பின் நசீர் எடுத்துக் கொண்ட முயற்சியை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
