'வலிப்பு வந்து கண்ணுக்கு முன்னாடி துடித்த எஜமானர்'... 'சமயோஜிதமாக செயல்பட்ட செல்ல நாய்'... வாயடைத்து போன மருத்துவர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்வலிப்பு நோயால் துடித்த எஜமானை, நாய் ஒன்று சாதுரியமாக செயல்பட்டுக் காப்பாற்றிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

என்னதான் மனிதன் பல செல்லப்பிராணிகளை வளர்த்தாலும், மனிதனுக்கு மிகவும் நெருக்கமானது நாய் தான். மனிதன் மீது அதிக பாசமும், விசுவாசமும் நாய்களுக்கு உண்டு. மனிதனுக்கும் நாய்க்கும் இடையே உள்ள பந்தத்தைப் பற்றிப் பல கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதே போன்று ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் பிரையன் என்பவர் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு, அதே மாகாணத்தில் உள்ள விலங்குகள் காப்பகத்திலிருந்து ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.
சேடி என்று பெயரிடப்பட்ட அந்த நாயின் முதல் எஜமானர், வேறு மாகாணத்துக்கு இடம்பெயர்ந்தபோது, விலங்குகள் காப்பகத்தில் சேடியைச் சேர்த்தார். உரிமையாளரைப் பிரிந்து காப்பகத்தில் தனிமையில் தவித்து வந்தது சேடி. இந்நிலையில், பிரையன் சேடியைத் தத்தெடுத்தார். தன்னை தனிமையிலிருந்து மீட்ட பிரையனிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தது சேடி.
கடந்த வாரம் இரவு, வீட்டில் யாருமில்லாத நேரம் பார்த்து, பிரையனுக்கு வலிப்பு வந்தது. சத்தம் கேட்டு, பிரையனின் அறைக்குச் சென்ற சேடி, தனது எஜமானர் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து அவருக்கு உடல்நலம் சரியில்லை என்பதை உணர்ந்தது. தொடர்ந்து, பிரையன் மயங்காமல் இருக்க அவர் முகத்தை நாக்கால் நக்கியது. மேலும், நகர முடியாமல் தவித்த பிரையனின் சட்டையைக் கவ்விக்கொண்டு செல்போன் இருக்கும் இடத்திற்கு இழுத்துச் சென்றது.
பிரையன், அவசர எண்ணிற்கு போன் செய்தார். இதைத் தொடர்ந்து, நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது பிரையனின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
பிரையன், விலங்குகள் காப்பகத்தில் தனிமையில் வாடிய சேடிக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பைக் கொடுத்தார். அதன் பின்னர் சேடி, பிரையன் மீது அன்பாகவும், விசுவாசமாகவும் இருந்தது. அதன் பலனாக பிரையன் மீண்டும் மறுபிறவி எடுத்துள்ளார். பிரையனின் உயிரைக் காப்பாற்றியதன் மூலம் சேடி நெட்டிசன்கள் ஆதரவை பெற்றுள்ளது.
எனினும், மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஜமானரை தினமும் வீடியோ காலில் பார்க்கிறது சேடி. பிரைன் தனது முகநூல் பக்கத்தில், சேடியைப் பற்றிப் பதிவிட்டபின், சேடி-பிரைன் கதை வைரலானது.

மற்ற செய்திகள்
