‘ஆசையா வளர்த்த பூனை’.. ‘அதை எப்படியாவது காப்பாத்தணும்’.. உயிரை பணயம் வைத்த சென்னை பேராசிரியர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஆசையாக வளர்த்த பூனை கிணற்றில் தவறி விழுந்ததால், அதை மீட்க முயன்று கிணற்றில் விழுந்த பேராசிரியரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

சென்னை அமைந்தகரை அய்யாவு காலனியில் வசித்து வருபவர் பின்.என்.டயர்ஸ் (80). இவர் லயோலா கல்லூரியில் 40 ஆண்டுகாலம் ஆங்கில பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் வீட்டின் முதல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு வளர்ப்பு பிராணிகள் மீது பாசம் என்பதால் அப்பகுதியில் உள்ள நாய்கள், பூனைகளுக்கு உணவளித்து வீட்டின் தரை தளத்தில் அவைகள் இருக்கவும் இடம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் வளர்க்கும் பூனை ஒன்று எதிர்பாராத விதமாக வீட்டின் பின்புறம் உள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளது. இதைப் பார்த்த டயர்ஸ் அதிர்ச்சியடைந்து பூனையை மீட்க நினைத்துள்ளார். ஆனால் அருகில் யாரும் உதவிக்கு இல்லாததால், தானே ஏணி எடுத்து வந்து கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி பூனையை காப்பாற்றியுள்ளார்.
ஆனால் ஏணி மூலம் அவர் மேலே ஏறும் போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் அவரை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனை அடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், லேசான காயங்களுடன் கிணற்றில் இருந்த டயர்சை சுமார் 1 மணிநேரம் போராடி மீட்டனர். வாயில்லாத ஜீவன் உயிருக்கு போராடுவதைப் பார்த்து முதுமை பற்றியும் கவலை கொள்ளாமல் தானே கிணற்றில் இறங்கி மீட்க முயன்ற பேராசிரியர் டயர்ஸின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
