சாப்பாடு தான் முக்கியம்னு சொல்லி 10 நாள் தான் ஆச்சு... அதுக்குள்ள வடகொரியா செய்துள்ள காரியம்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரியா : 2022-ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்து வடகொரியா இரு ஏவுகணை சோதனை நடத்திய சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏவுகணை சோதனைகளில் பெயர் போன வடகொரியா கடந்த 5ஆம் தேதி ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
தங்கள் நாட்டு பட்ஜெட்டில் முக்கால் பங்கு ராணுவ தளவாடங்களுக்கும், அணு ஆயுதங்களுக்குமே செலவு செய்யும் ஒரே நாடு வடகொரியா தான். வடகொரியா அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.
உணவு தான் முக்கியம்:
கடந்த வருட கடைசியில் வடகொரியாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தன்னுடைய புத்தாண்டு உரையில் 'இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல’ என்று கூறினார்.
இரண்டு தடவை சோதனை:
இந்த உரையை கேட்ட உலக நாடுகளோ, இந்த ஆண்டு முதல் வடகொரியா ஏவுகணை பரிசோதனையை படிப்படியாக குறைத்துக்கொள்ளும் என நினைத்தது. ஆனால் இப்போது நடப்பதோ தலைகீழாக உள்ளது. புத்தாண்டு முடிந்த கையோடு வடகொரியா கடந்த வாரம் புதன் கிழமை (ஜன.5) தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை சோதனை செய்தது. இந்நிலையில், அந்த சோதனை நடைபெற்று ஒருவாரம் கூட நிறைவடையாத நிலையில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை செய்துள்ளது.
ஜப்பான் கடல்பகுதியில் சோதனை:
சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் இந்த சோதனை ஜப்பான் கடல் பகுதி அருகே நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அமெரிக்கா, பிரான்ஸ், அயர்லாந்து, பிரிட்டன் மற்றும் அல்பேனியா உள்ளிட்ட நாடுகள் ஏவுகணை சோதனையைத் தவிர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளன.