‘தனிமைப்படுத்தப்பட்டவர்கள்’... ‘சுயமாக பரிசோதனை செய்துகொள்ளலாம்’... ‘அமெரிக்க பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 17, 2020 10:40 PM

கொரோனா வைரஸ் பரிசோதனையை எளிமையாக மருத்துவப் பணியாளர்களுக்கு தொற்றாதவாறு சோதனையை செய்யும் முறையை அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

American university is introducing rapid saliva test for coronavirus

கொரோனா வைரஸ் தொற்றை உறுதிசெய்ய, குறிப்பிட்ட நபரின் மூக்கின் பின்னால் உள்ள மேல் தொண்டைப் பகுதியின் சுரப்பு எடுக்கப்பட்டு (swab test) பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது சர்வதேச அளவில் தற்போதுவரை வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றிய நபர்களுக்கு, நேரடித் தொடர்பிலிருந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது.

ஏற்கனவே உலக அளவில் சுமார் 22,000 மருத்துவப் பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.இந்நிலையில், மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தும்போது, தொற்றுக்கு உள்ளாவதைத் தடுக்கும் விதமாக அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் புதிய ஆய்வை மேற்கொண்டு, சோதனைக் குழாய்கள் மூலம் உமிழ்நீர் பெறும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் எளிதாக விரைவில் கொரோனா தொற்று குறித்து அறியலாம்.

இந்த முறையில், பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோருக்கு மருத்துவப் பணியாளர்களின் உதவி தேவைப்படாது. நேரடியாக, அவர்கள் தங்களது உமிழ்நீரை குழாயினுள் செலுத்தலாம். மேலும், இந்த முறையின் மூலம், பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோருக்கு எந்த வித அசெளகர்யமும் ஏற்பட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு தலைமை அதிகாரி ஆண்ட்ரூ ப்ரூக்ஸ் பேசுகையில், `குழாய் மூலம் உமிழ்நீர் பெறும் சோதனை, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்களுக்கு தொற்று உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சுயமாகச் செய்துகொள்ளும் வகையில் உள்ளதால், எதிர்வரும் நாள்களில் அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்ள இயலும். மேலும், இதனால் மருத்துவப் பணியாளர்கள் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோருடன் நேரடித் தொடர்பில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதால், அவர்கள் பாதுகாப்பான உணர்வுடன் பணிக்கு வருவார்கள்’ எனத் தெரிவித்தார்.