"உணவு பொருள் வாங்கக்கூட மக்கள் வரிசையில் நிற்பது கவலையளிக்கிறது".. ராஜினாமா செய்த இலங்கை அமைச்சர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமையை சுட்டிக்காட்டி அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இலங்கை அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருளாதார நெருக்கடி
இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து உள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலையும் விண்ணை தொட்டுள்ளது. அரிசி, பிரெட், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், உணவு பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் தினந்தோறும் 13 மணி நேரம் மின்வெட்டு நிலவி வருவதால் பொதுமக்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
போராட்டம்
இதனை அடுத்து இலங்கை தலைநகரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கொழும்புவில் உள்ள அவர் வீட்டின் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 45 பேர் கைது செய்யபட்டுள்ளதாக தெரிகிறது. கொழும்புவின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், இலங்கையில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்து உள்ளார்.
பதவி விலகல்
இந்நிலையில், இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நிலைமையை சுட்டிக்காட்டி அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி விலகுவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து, இலங்கை அதிபருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் உணவு பொருட்கள் வாங்கக்கூட பொதுமக்கள் வரிசையில் நிற்பது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்தும், இலங்கை பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத் தலைமைப் பதவியிலிருந்தும் மே 01 ஆம் தேதி முதல் இராஜினாமா செய்வதாக ரோஷன் ரணசிங்கே அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார சிக்கலில் இலங்கை சிக்கித் தவிக்கும் நிலைமையில் ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் பதவி விலகுவதாக அறிவித்திருப்பது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
