"இலங்கை இந்த நிலைக்கு வந்ததுக்கு அதுதான் காரணம்".. வீடியோவில் உண்மையை உடைத்த இலங்கை மூத்த பத்திரிக்கையாளர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அண்டை நாடான இலங்கை மிக மோசமான பொருளாதர நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதற்கான காரணங்கள் குறித்து நம்மிடம் விவரித்திருக்கிறார் இலங்கையின் மூத்த பத்திரிகையாளரான ரசூல்.
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து வருகிறது. பால், அரிசி, பிரெட் உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். மின்சாரம் தினந்தோறும் மணிக்கணக்கில் துண்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்? இலங்கையின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து ரசூல் பேசி இருக்கிறார்.
முதல் முறையாக
இலங்கையில் இதற்கு முன்னர் இதுபோன்ற பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டதா? என கேட்டதற்கு பதில் கூறிய ரசூல்," என்னுடைய பத்திரிக்கை அனுபவத்தின் அடிப்படையில் இப்படி ஒரு மோசமான சூழ்நிலையை இலங்கை சந்தித்தது கிடையாது. இதுகுறித்து மூத்தவர்களிடம் பேசும்போது பண்டாரநாயக்கா காலத்தில் இருந்து இப்படி ஒரு விலைவாசி ஏற்றத்தை கண்டதில்லை என்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
எரிபொருளின் விலை 1400 ரூபாயில் இருந்து தற்போது 2700 ரூபாய் வரையில் சென்றுவிட்டதாக குறிப்பிட்ட ரசூல், இதன் காரணமாக உணவகங்கள் மூடப்பட்டு இருப்பதாகவும் அதனால் உணவகங்களை நம்பி இருந்த மக்கள் தவித்து வருவதாக தெரிவித்தார்.
இளைஞர்கள்
இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால் ஏராளமான இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருவதாக குறிப்பிட்ட ரசூல், இது இலங்கையின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் எனக் குறிப்பிட்டார்.
அரசு குறித்து மக்கள் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகவும் அதன் காரணமாகவே இலங்கை நாடாளுமன்ற கட்டிடத்தின் அருகே போராட்டம் நடைபெற்றதாகவும் தெரிவித்த ரசூல்," மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் கோத்தபய ராஜபக்சே ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்று நூற்றுக்கு 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அரசின் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறுகின்றனர்" என்றார்.
என்ன காரணம்?
இலங்கை அரசு சந்தித்து வரும் இந்த மோசமான பொருளாதர நெருக்கடிக்கு என்ன காரணம்? என ரசூலிடம் கேட்டபோது," இலங்கை ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. குறிப்பாக அமெரிக்க டாலருக்கு இணையான இலங்கை ரூபாயின் மதிப்பு மோசமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. மத்திய வங்கியின் புள்ளிவிபரப்படி கடந்த 2019 ஆம் ஆண்டு 3.5 ஆக இருந்த நாட்டின் பணவீக்கம் இப்போது 16 சதவீதத்தை எட்டியுள்ளதை பார்க்க முடிகிறது. அரசிடம் தெளிவான நாணய கொள்கை இல்லாததன் காரணமாகவே இந்த சூழல் ஏற்பட்டுள்ளது" என்றார்.
அத்தியாவசிய பொருட்களில் அரசி விலை 200 ரூபாயை நெருங்கியுள்ளதாக குறிப்பிடும் ரசூல், அன்றாடம் தேவைப்படும் பொருட்களை பெறவும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டி இருப்பதாக குறிப்பிட்டார்.
அம்மாவை விட்ருங்க.. ஓடிவந்த மகன்.. மனைவியின் மீது வந்த சந்தேகத்தால் கணவர் செய்த விபரீத காரியம்..!