கடந்த பல ஆண்டுகளாக இலங்கை அரசின் முக்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது சீனா. இலங்கையில் பல்வேறு முதலீடுகளையும், கடனுதவியையும் சீனா தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் சிறிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் இலங்கை அதிபர் கோத்தபயா, விவசாயத்துக்கு இனி நாட்டில் செயற்கை உரங்களுக்கு பதில் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று திடீர் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு உள் நாட்டு விவசாயிகள் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இப்படி திடீரென்று உரக் கொள்கையை மாற்றினால் அது உணவு உற்பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உணவுப் பஞ்சத்துக்கு வழிவகுக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள் விவசாயிகள். இந்த சூழலில் சீனாவிலிருந்து இலங்கைக்கு வந்த இயற்கை உரத்தின் தரம் சரியில்லை என்று சுட்டிக்காட்டி அதற்குத் தடை விதித்தது இலங்கை உயர் நீதிமன்றம்.
இதன் தொடர்ச்சியாக சீனா, இலங்கை ஸ்டேட் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது. இதன் விளைவாக இலங்கை அரசு, வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தில் பெரும் நெருக்கடியை சந்தித்தது. அதுவே நாட்டின் நிதி நெருக்கடிக்கு இட்டுச் சென்றது. தற்போது இந்தப் பிரச்சனை சரிசெய்யப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் நிதி நெருக்கடி நிலை சீர்செய்யப்படும் என்றும் இலங்கை அரசு கூறி வருகிறது.
இந்நிலையில் இலங்கைக்கு திடீர் வருகை தந்துள்ளார் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி. அவர் அந்நாட்டுப் பிரதமர் கோத்தபயா ராஜபக்சாவை நேரில் சந்தித்துப் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசியுள்ளார். அப்போது சீனாவிடம் இருந்து பெற்ற கடனுக்கான தவணை முறைகள் மாற்றித் தர வேண்டும் என இலங்கை அதிபர் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே ஹம்பான்தோட்டை துறைமுக கட்டுமானப் பணிகளுக்காக வாங்கிய பணத்தைத் திருப்பித் தர முடியாததால் அந்தத் துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது இலங்கை அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
