10 வயசுல எழுதி கடலில் போட்ட கடிதம்.. 37 வருஷம் கழிச்சு கைக்கு வந்த வினோத சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்37 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
பொதுவாக, கடிதம் ஒன்றை எழுதி அதனை ஒரு கண்ணாடி பாட்டிலுக்குள் போட்டு தண்ணீரில் அதனை வீசி எறிவது குறித்து நாம் நிறைய செய்திகளை கேள்விப்பட்டிருப்போம். முன்பு தண்ணீரிலோ அல்லது ஏதாவது தீவிலோ தத்தளிக்கும் நபர்கள், இது போல குறிப்பை பாட்டிலுக்குள் வைத்து தண்ணீரில் விடுவது பற்றி சில கதைகளில் கேள்விப்பட்டிருப்போம். அதன் பின்னர், இதனை சிலர் விளையாட்டாகவும் கூட ஏதாவது எழுதி, அதனை பாட்டிலில் அடைத்து தண்ணீரில் வீசவும் செய்திருந்தார்கள்.
இந்த நிலையில், 37 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று தற்போது கிடைத்துள்ள நிலையில், இதன் பின்னணி தான் தற்போது பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது. அமெரிக்காவின் கென்டக்கி என்னும் பகுதியை சேர்ந்தவர் ட்ராய் ஹெலர். இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு தனக்கு பத்து வயதாக இருந்த சமயத்தில், கடிதம் ஒன்றை எழுதி அதனை பாட்டிலுக்குள் போட்டு புளோரிடா கடலில் வீசி எறிந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் புயல் ஏற்பட்ட சமயத்தில் 37 ஆண்டுகளுக்கு முன்பு ஹெலர் எழுதிய கடிதம் அடங்கிய பாட்டில் கரை ஒதுங்கியதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து, புயல் ஓய்ந்த பின்னர், கரை ஒதுங்கிய குப்பைகளை இருவர் சுத்தம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது, அவர்கள் ஹெலர் எழுதிய கடிதம் உள்ள பாட்டிலையும் எடுத்துள்ளனர்.
அவர்கள் அதனை வீட்டிற்கு எடுத்து வந்து திறந்து பார்த்த போது, அதில் இருந்த கடிதத்தில் எழுதிய நபர் பெயர், அவரின் முகவரி மற்றும் தேதி உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. "இந்த கடிதத்தை கண்டெடுப்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்" என அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், நீண்ட முயற்சிக்கு பின்னர் ட்ராய் ஹெலரையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 37 ஆண்டுகளுக்கு முன் 10 வயதில் தான் எழுதிய கடிதம் திரும்ப கிடைத்திருப்பதை அறிந்து ஒரு நிமிடம் ஆடி போயுள்ளார் ஹெலர்.
இது நான் நினைத்து பார்க்காத ஒன்று என குறிப்பிடும் ட்ராய், அப்போது கடலில் எறிந்து எத்தனை தூரம் செல்கிறது என பார்க்க தான் அப்படி செய்ததாக நினைவிருக்கிறது என்றும் அது கடைசியில் என்னிடமே திரும்பி உள்ளது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.