'கையில் காசோடு பிறந்த குழந்தையை பார்க்க ஓடிய தந்தை'... 'திடீரென தொலைந்த பர்ஸ்'... 'சிசிடிவியில் கண்ட காட்சி'... நெகிழ வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த உலகம் நல்லவர்களால் நிறைந்துள்ளது, அன்பும் மனிதாபிமானமும் இன்னும் பலரிடம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வண்ணம் நடந்துள்ளது இந்த சம்பவம்.

அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரைச் சேர்ந்தவர் Dwayne Freeman. இவரது மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில் அவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் தனது மனைவியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வேகமாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய அவர் தனது பர்ஸை தொலைத்து விட்டார். அதில் அவரின் கிரெடிட் கார்டு மற்றும் பணம் என அனைத்தும் அதில் தான் இருந்தது. குழந்தை பிறந்த நேரத்தில் அந்த பணம் எவ்வளவு முக்கியம் என்பது அவருக்குத் தான் தெரியும்.
இதனிடையே பர்ஸை தொலைத்த சோகத்தில் வீட்டிற்கு வந்த Dwayne, வீட்டின் வாசலில் உள்ள லெட்டர் பாக்ஸில் தனது பர்ஸ் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். யார் இதை இங்குக் கொண்டு வைத்திருப்பார்கள் என எண்ணிய அவர், தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது பெண் ஒருவர் அவரின் பர்ஸை லெட்டர் பாக்ஸில் வைத்து விட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
தனது பர்ஸில் Dwayne வைத்திருந்த பணம், கிரெடிட் கார்டு என அனைத்தும் பத்திரமாக இருந்தது. இதைப் பார்த்து நெகிழ்ந்து போன அவர், எந்த பிரதி பலனையும் பார்க்காமல் பர்ஸை கொண்டு வந்து சேர்ந்த அந்த பெண்ணிற்குத் தனது நன்றிகளைத் தனது முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ''பர்ஸில் இருந்த ஓட்டுநர் உரிமத்திலிருந்த விலாசத்தைப் பார்த்து அந்த பெண் பர்ஸை என்னிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளார். அவருக்கு எனது நன்றியையும், பூக்களையும் சாக்லேட்களையும் கொடுக்க ஆசைப்படுகிறேன் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். Dwayne முகநூல் பதிவு வைரலாகி வரும் நிலையில் பலரும் அந்த பெண்ணிற்கு நன்றிகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
