ஒரே 'லாட்டரி'.. ஓஹோனு வாழ்க்கை.. கேரள பெண்ணுக்கு வெளிநாட்டுல அடிச்ச மெகா ஜாக்பாட்
முகப்பு > செய்திகள் > உலகம்அபுதாபி : கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, அபுதாபி லாட்டரி குலுக்கலில், பெரிய அளவிலான பரிசுத் தொகை கிடைத்துள்ளது.
ஒரே அளவில், லட்சாதிபதியாகவோ, கோடீஸ்வரராகவோ மாற முடியுமா என்றால், நிச்சயம் கடினமான காரியம் தான்.
அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால், நிச்சயம் அவர் மிகப்பெரிய மச்சக்காரர் தான். அந்த வகையில், யாரும் எதிர்பாராத நிலையில், பெண் ஒருவருக்கு லாட்டரி குலுக்கலில், கோடிக்கணக்கான ரூபாய் பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது.
லாட்டரி குலுக்கல்
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லீனா ஜலால். ஐக்கிய அரபு அமீரக நாட்டின், தலைநகரான அபுதாபியில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றில், மனித வள வல்லுனராக அவர் பணிபுரிந்து வருகிறார். வார வாரம் நடைபெறும் 'Big Ticket' என்னும் லாட்டரி குலுக்கலில், லாட்டரி டிக்கெட் ஒன்றை லீனா வாங்கியுள்ளார்.
கோடீஸ்வரியான மலையாளி பெண்
கடந்த 3 ஆம் தேதி, இவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு, குலுக்கல் முறையில், பரிசு கிடைத்துள்ளது. 22 மில்லியன் திர்ஹம் (இந்திய மதிப்பில் சுமார் 44 கோடியே 75 லட்சம்) பரிசு தொகை விழுந்துள்ள நிலையில், மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போயுள்ளார் லீனா ஜலால்.
தனக்கு கிடைத்துள்ள பரிசு தொகையை 10 பேருடன் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ள லீனா, பரிசுத் தொகையின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அபு தாபியில் மிகப் பெரிய பரிசுத் தொகையை வென்ற லீனா ஜலாலுக்கு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஒருவருக்கு பரிசு
லீனா ஜலால் மட்டுமில்லாமல், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கும் 'Big Ticket' லாட்டரி மூலம், அதிர்ஷ்டம் வந்து சேர்ந்துள்ளது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுரைஃப் என்பவருக்கும், ஒரு மில்லியன் திர்ஹம் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்) பரிசு கிடைத்துள்ளது.
நண்பர்களுக்கு உதவி
தனக்கு கிடைத்த பரிசுத் தொகை பற்றி பேசிய சுரைஃப், 'இந்த பணத்தினை, 29 பேருடன் பகிர்ந்து கொள்ளவுள்ளேன். எனது ஏழை நண்பர்கள் சிலருக்கு, இதன் ஒரு பங்கினை கொடுத்து உதவவுள்ளேன். எனது பெற்றோர்களுக்கும் ஒரு பங்கினை கொடுக்கவுள்ளேன். மீதமுள்ள பணத்தை, எனது எதிர்காலத்தின் பாதுகாப்பிற்காக, மனைவி மற்றும் மகளுக்காக சேமிக்க விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
ஒரே லாட்டரி குலுக்கலில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர், பரிசுத் தொகையை வென்று அசத்தியுள்ளது, பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.