தோல் நோய் சிகிச்சைக்கு பிரபல ஹாலிவுட் நடிகரின் புகைப்படம்.. மருத்துவமனையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகர்கள், நடிகைகளை வைத்து தனது கடைக்கு விளம்பரம் பலகைகளை தயார் செய்து வாடிக்கையாளர்களை கவர்வார்கள். சலூன் கடைகளில் நடிகர்கள் புகைப்படமும், பியூட்டி பார்லருக்கு பிரபலமான நடிகைகளின் புகைப்படமும் இடம்பெறும். ஒரு பொருளை விற்க நடிகர்கள், நடிகைகளோடு ஒப்பிட்டு பேசி பொருளை வியாபாரி புதிய யுக்தியை கையாளுவார். அந்த வகையில், கேரளாவில் வடகரா கூட்டுறவு மருத்துவமனையில் தோல் நோய் சிகிச்சைக்கு பிரபல ஹாலிவுட் நடிகரின் புகைப்படத்தை வைத்து விளம்பரம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெ ஷாஷாங் ரெடெம்ப்சன் (The shawshank redemption), செவென், ஒபிலிவியன், லூசி போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்தவர் மோர்கன் ப்ரீமேன். இன்விக்டஸ் என்னும் திரைப்படத்தில் நெல்சன் மண்டேலாவாக நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர். நடிகர், இயக்குநர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்கிறார். இவரது புகைப்படத்தை வைத்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
வடகரா கூட்டுறவு மருத்துவமனையில் மரு, மச்சம், கருமையான பழுப்பு, சுருக்கங்கள், நிறமிகள் போன்ற தோல் நோய்களைக் குணப்படுத்த அவரது புகைப்படத்தை வைத்து விளம்பரத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். இதுபோன்ற பிரச்னைகளுக்கு மருத்துவமனையை அணுகவும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மருத்துவமனை வாசலில் வைக்கப்பட்டிருந்த மோர்கன் ப்ரீமேனின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் ட்ரோல் செய்தும் வீடியோ வெளியிட்டு வந்தனர். பலரும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திரைப்பட விமர்சகர் ஜி.பி.ராமச்சந்திரன், மருத்துவமனையை சமூகவலைதளத்தில் பகிர்ந்து விமர்சித்துள்ளார். 'வடகரா 'கூட்டுறவு மருத்துவமனை கேரளாவின் கூட்டுறவுத்துறைக்கு தலைக்குணிவையும் அவமானத்தையும் தேடி தந்துள்ளது. இது கேரள மக்களை உலகத்தின் பார்வையில் அவமதிப்பை தருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தனது செயலுக்கு மனம் திருந்திய வடகரா கேரள கூட்டுறவு மருத்துவமனை மன்னிப்பு கோரியுள்ளது. பின்பு ஹாலிவுட் நடிகர் மோர்கன் ப்ரீமேனின் புகைப்படத்தை எடுத்துள்ளது.