ஏன் கலெக்டர் ராணி சோயா மயி மேக்கப் போட மாட்டாங்க? கேரளாவில் வைரலாக பரவிய பதிவு.. வெளிவந்துள்ள உண்மை
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளா: மலையாள எழுத்தாளர் ஒருவரின் கதையை மாவட்ட ஆட்சியரின் வாழ்க்கை வரலாறு என பலர் சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர்.
![Fake news spread social media Collector biography in kerala Fake news spread social media Collector biography in kerala](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/fake-news-spread-social-media-collector-biography-in-kerala.jpg)
கேரள மாநிலம், மலப்புறம் மாவட்ட ஆட்சியர் ராணி சோயாமயி என்பவரின் நெஞ்சை உருக்கும் பதிவு ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அந்த பதிவில் மலப்புறம் மாவட்ட கலெக்டரான சோயாமயி கல்லூரியில் மாணவிகளோடு உரையாடுகிறார்.
பழங்குடி குடும்பத்தில் பிறந்தேன்:
அப்போது, ஒரு மாணவி ஒருவர் ஏன் நீங்கள் மேக்கப் போடவில்லை என கேட்டதற்கு அந்த மாவட்ட ஆட்சியர், 'நான் ஜார்கண்டில் பழங்குடி குடும்பத்தில் பிறந்தேன். என் தந்தையும், தாயும் சுரங்கத்திற்குள் சிறு துவாரங்களில் படிந்திருக்கும் மைக்கா உள்ளிட்ட வேதிப்பொருள்களை தங்கள் கைகளால் வாருவார்கள். ஒரு நாள் முழுக்க வாரினால் தான் ஒருநாள் பட்டினி இன்றி சாப்பிடலாம். எங்கள் வீட்டில் இருக்கும் வறுமை காரணமாக நானும் சுரங்கத்தில் மைக்கா வார செல்வேன். அப்போது, எனக்கு குமட்டலும் வாந்தியும் வரும்.
ஒருமுறை என் தாயும், தந்தையும் சகோதரிகளும் சுரங்கத்தில் மண் இடிந்து விழுந்ததால் அதில் சிக்கி இறந்துவிட்டனர்.அதன்பின் நான் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் சேர்ந்து படித்து கலெக்டர் ஆனேன். எங்களை போன்றோர் எடுக்கும் மைக்கா பொருள்களில் தான் அழகு சாதனப் பொருள்கள் செய்கிறார்கள்.
அழகு சாதனப் பொருள்களைப் பார்த்தால் அந்தக் குழந்தைகளின் முகம் தெரிகிறது:
உங்களுக்கு நான் அழகு சாதனப் பொருள்கள் பயன்படுத்தவில்லை என காணமுடிகிறது. ஆனால் எனக்கோ அழகு சாதனப் பொருள்களைப் பார்த்தால் அந்தக் குழந்தைகளின் முகம் தெரிகிறது' எனக் கூறுவதாக அந்த பதிவு முடிகிறது.
இந்த பதிவு கேரளா முழுவதும் பரவி வைரலாகி பலரின் மனதை தொட்டது. இந்நிலையில் தான் இந்த கதை மலையாள எழுத்தாளர் ஹக்கீம் மொறயூர் என்பவரின் மூந்நு பெண்ணுங்ஙள் (மூன்று பெண்கள்) என்ற சிறுகதை தொகுப்பில் நான் எழுதிய 'திளங்ஙுந்ந முகங்ஙள்' (ஒளிரும் முகங்கள்) என்ற கதையில் வரும் ஒரு பகுதி என தெரிய வந்துள்ளது.
இது குறித்து மலையாள எழுத்தாளர் ஹக்கீம் மொறயூர் தன்னிலை விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், 'என்னுடைய கதையில் வரும் மலப்புறம் கலெக்டர் ராணி சோயாமயி என்ற கதாபாத்திரத்தை சிலர் உண்மை என நம்பிவிட்டார்கள்.
வருத்தமாக உள்ளது:
எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு கதையை எழுத்தாளன் உருவாக்குகிறான். என்னுடைய கதையை தவறாக பயன்படுத்துவதை கண்டு எனக்கு வருத்தமாக உள்ளது. யாரோ ஒரு பெண்ணின் போட்டோவை போட்டு இந்த கதையை பதிவேற்றம் செய்பவர்களால் வரும் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அவர்களுடன் வாதிட நேரமும் இல்லை, அதற்கான திறமையும் இல்லை. எப்படியும் வாழ்ந்துவிட்டு போங்கள், ஆனால் வயிற்றில் அடிக்காதீர்கள்' எனக் கூறியுள்ளார்.
அதன் பின் இணைய நெட்டிசன்கள் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் ராணி சோயாமயி என ஒரு கலெக்டர் இருக்கிறாரா என ஆய்வு செய்துள்ளனர். ஆனால், அப்படி ஒரு பெயரில் இப்போதும் இல்லை, இதற்கு முன்பும் இருந்ததில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறிப்பாக உண்மை என்ன என்று தெரியாமல் forward செய்பவர்களுக்கு பொருந்தும்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)