தட்டி வீசிய புயல்.. மொத்த நாட்டுக்கும் கரண்ட் கட்.. எல்லாம் முடிஞ்சதுன்னு நெனச்சப்போ அதிகாரிகள் சொல்லிய பகீர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இயான் புயல் காரணமாக கியூபா மிக மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. நாட்டின் நிலைமை சீராக சில காலம் பிடிக்கும் என்கிறார்கள் அதிகாரிகள்.
இயான் புயல்
அட்லாண்டிக் கடலில் மையம் கொண்டிருந்த இயான் புயல் கடந்த செவ்வாய்க்கிழமை கியூபாவை தாக்கியது. மணிக்கு 205 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் மின்சார கோபுரங்கள் சாய்ந்து வீழ்ந்தன. மேலும், கனமழை தொடர்ந்து வருவதால் பள்ளமான பகுதிகளில் நீர் புகுந்திருக்கிறது. இந்த புயலினால் நாட்டின் வடபகுதி மோசமான பாதிப்புகளை சந்தித்திருக்கிறது. மேலும் அந்நாட்டின் புகையிலை பண்ணைகள் வெள்ள நீரில் மூழ்கியிருக்கின்றன.
கியூபாவின் எலக்ட்ரிக் யூனியன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "நாட்டின் 11 மில்லியன் மக்களுக்கு இரவில் சேவையை வழங்கும் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகின்றன. கியூபாவின் மேற்கு மாகாணங்களில் சுமார் 1 மில்லியன் மக்களுக்கு ஆரம்பத்தில் மின்சாரம் தடைபட்டது. பின்னர் புயல் காரணமாக மொத்த மின் பகிர்மானமும் சேதமடைந்துவிட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரண்ட் கட்
கியூபாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் பினார் டெல் ரியோ மாகாணம், சிகார் தயாரிப்பு பணிகளுக்கு பெயர்போனது. இங்கு ஏராளமான புகையிலை பண்ணைகள் இருக்கின்றன. இந்நிலையில், இயான் புயல் காரணமாக இப்பகுதியின் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. புயல் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான மக்கள் முன்கூட்டியே ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேறியதால் இழப்புகள் குறைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
அடுத்து அமெரிக்கா
இயான் புயல் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மிரட்டி வருகிறது இப்புயல். இதன் காரணமாக சுமார் 2.5 மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், சுமார் 1.8 மில்லியன் வீடுகளுக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. புளோரிடா கடற்கரைகள் புயலின் தீவிரம் காரணமாக கொந்தளிப்புடன் காணப்படுகின்றன. இது அசாதரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.