புயல்ல சிக்கிய 8 கோடி ரூபாய் கார்.. நெட்டிசன்களின் நெஞ்சை உடைய வைத்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்இயான் புயலில் விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்ட வீடியோ பலரையும் கலங்க செய்திருக்கிறது. இந்த வீடியோவை தற்போது இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இயான் புயல்
அட்லாண்டிக் கடலில் மையம் கொண்டிருந்த இயான் புயல் கடந்த செவ்வாய்க்கிழமை கியூபாவை தாக்கியது. இதனால் அந்நாட்டின் மின்கட்டுமானம் மொத்தமாக சேதமடைந்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் கடுமையான மழைப்பொழிவு ஒரு பக்கமும், அதிவேக புயல்காற்று ஒருபக்கமும் போட்டு புளோரிடாவை வதைத்து வருகிறது.
இந்த இயான் புயல் அமெரிக்கா சந்தித்த மோசமான புயல்களில் ஒன்று என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். புளோரிடாவில் புயல் காரணமாக மணிக்கு 245 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிவருகிறது. இதனால் சுமார் 2 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக 2.5 மில்லியன் மக்கள் வெளியேறும்படி நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுவரையில் 20 பேரை காணவில்லை என மீட்புப்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.
வைரலாகும் வீடியோ
புளோரிடாவைச் சேர்ந்த ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புத்தம் புதிய 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மெக்லாரன் பி1 சூப்பர் கார் இயான் சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்ட படங்களை பகிர்ந்திருக்கிறார். எர்னி என்ற சொகுசு கார் உரிமையாளர் தனது சமூக ஊடக பக்கங்களில் தொடர்ச்சியான படங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது புதிய மஞ்சள் நிற கார் நேபிள்ஸ் பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் கலங்கடித்திருக்கிறது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய மெக்லாரன் கார் கரேஜில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், புயலினால் அது அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். காரின் கதவுகள் திறந்திருக்கும்படியான புகைப்படம் ஒன்றையும், தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் காருடன் மெக்லாரன் கார் நிற்கும் படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.
இந்நிலையில், மற்றொருவர் இந்த மெக்லாரன் கார் தண்ணீர் சூழ்ந்த இடத்தில் நிற்கும் வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில்,"இந்த புயலின் காரணமாக கராஜில் இருந்து வெளியே அடித்துச் செல்லப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ கார் பிரியர்களை கலங்க செய்திருக்கிறது.
Also Read | சிறுகோளை சிதறடித்த நாசாவின் விண்கலம்.. கரெக்ட்டான நேரத்துல வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படம்..!