கட்டுக்கட்டாக சிக்கிய போலி 2000 ரூபாய் நோட்டுகள்.. அதுல இருந்த ஸ்பெல்லிங்கை பாத்துட்டு ஷாக்காகிப்போன அதிகாரிகள்.. இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா..?
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தில் கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகளை போலீஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த ரூபாய் நோட்டுகளில் இருந்த எழுத்துக்கள் அதிகாரிகளை குழப்பமடைய செய்திருக்கின்றன.
![Fake Notes With Reverse Bank of India Printed Recovered Fake Notes With Reverse Bank of India Printed Recovered](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/fake-notes-with-reverse-bank-of-india-printed-recovered.png)
Also Read | சிறுகோளை சிதறடித்த நாசாவின் விண்கலம்.. கரெக்ட்டான நேரத்துல வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படம்..!
போலி நோட்டுகள்
குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அங்கே கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆம்புலன்ஸ் ஒன்றில் வைத்து பல கோடி ரூபாய் போலி நோட்டுகள் கடத்தப்படுவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு மீண்டும் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.
இதனையடுத்து, சூரத் பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்றில் இருந்து கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ரூ.25.80 கோடி மதிப்புள்ள இந்த பணம் அட்டை பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்திருக்கிறது. இதனை கைப்பற்றிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும்போது தான், அதில் "ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா" என்பதற்கு பதிலாக, "ரிவர்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா" என அச்சிடப்பட்டது தெரியவந்திருக்கிறது.
ரிவர்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா
இதுகுறித்து பேசிய ஊரக எஸ்பி ஹிதேஷ் ஜோய்சர்,"சூரத்தில் ரூ.25.80 கோடி அளவிலான போலி ரூபாய் நோட்டுகள் ஆம்புலன்ஸில் மறைத்துவைத்துக் கொண்டு செல்லப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அந்த ஆம்புலன்ஸை அகமதாபாத்-மும்பை சாலையில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆம்புலன்ஸை சோதனை செய்ததில் ரூ.2,000 போலி நோட்டுகள் அடங்கிய 6 அட்டைப்பெட்டிகள் சிக்கின. அதில் இருந்த ரூ.25.80 கோடி அளவிலான போலி நோட்டுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இந்த நோட்டுகளில், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்பதற்கு பதிலாக, `ரிவர்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இந்த நோட்டுகள் எங்கு அச்சிடப்பட்டன? எங்கே கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டது? ஆகியவை குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
இந்நிலையில், வங்கி அதிகாரிகளுக்கும் இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்து இதுபற்றி விசாரணை நடத்திவருவதாக ஹிதேஷ் தெரிவித்திருக்கிறார். கோடிக்கணக்கான போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குஜராத் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)