'ஒன்பது மாதங்களாக பெண் ஒருவர் அனுபவித்த வேதனை’... ‘முயற்சியை விடாமல்’... ‘சிகிச்சை அளித்து வெற்றி கண்ட மருத்துவர்கள்’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் பெண் ஒருவர் 9 மாதங்கள் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்தின் மியாமி நகரில் உள்ள ஜாக்சன் மெமோரியல் மருத்துவமனையில் 15 வருடங்களாக உதவியாளராக பணியாற்றி வந்தவர் 41 வயதான ரோசா ஃபெலிப் (Rosa Felipe). இந்நிலையில், ரோசா ஃபெலிப்பிற்கு கடந்த மார்ச் 9-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் தான் பணிபுரிந்துவந்த அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் மற்றும் ஆஸ்துமா ஆகிய பிரச்சனைகள் இருந்துள்ளன. இதனால், கொரோனா சிகிச்சை அளிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
ஒரு கட்டத்தில் கொரோனாவின் உச்சபட்ட பாதிப்பால் அவதிப்பட்ட ரோசா ஃபெலிப் இனி உயிர் பிழைக்கமாட்டார் என அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் நினைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட ரோசா ஃபெலிப்புமே தான் இனி உயிர் பிழைக்கமாட்டோம் என எண்ணியுள்ளார்.
ஆனாலும், முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அவர் 2 மாதங்கள் தீவிர சிகிச்சை பிரிவான ஐசியூவில் செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெற்றுள்ளார். மருத்துவர்களின் விடா முயற்சியாலும், ரோசா ஃபெலிப்பின் தன்னம்பிக்கையாலும் அவர் 9 மாதகால சிகிச்சைக்கு பின் நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து ரோசா ஃபெலிப் கூறுகையில், ‘நான் உயிர்பிழைப்பேன் என்று நினைக்கவில்லை. கொரோனா உண்மையானது. அதன் பாதிப்புகளும் உண்மையானவை. ஆனால், இங்கு பெற்ற அன்பு அதைவிட மிகவும் உண்மையானது. நான் உணர்ச்சிகளை கடக்க முயற்சிக்கிறேன்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
