மணிக்கு 240 கிமீ வேகத்துல வீசிய புயல்.. சாலையில் சிக்கிய செய்தியாளர்.. போராடி மீண்ட திக் திக் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் வீசிவரும் இயான் புயலில் சிக்கிய செய்தியாளர் ஒருவர் அதிலிருந்து மீண்டு வரும் திகில் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இயான் புயல்
அட்லாண்டிக் கடலில் மையம் கொண்டிருந்த இயான் புயல் கடந்த செவ்வாய்க்கிழமை கியூபாவை தாக்கியது. இதனால் அந்நாட்டின் மின்கட்டுமானம் மொத்தமாக சேதமடைந்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் கடுமையான மழைப்பொழிவு ஒரு பக்கமும், அதிவேக புயல்காற்று ஒருபக்கமும் போட்டு புளோரிடாவை வதைத்து வருகிறது.
இந்த இயான் புயல் அமெரிக்கா சந்தித்த மோசமான புயல்களில் ஒன்று என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். புளோரிடாவில் புயல் காரணமாக மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிவருகிறது. இதனால் சுமார் 2 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக 2.5 மில்லியன் மக்கள் வெளியேறும்படி நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுவரையில் 20 பேரை காணவில்லை என மீட்புப்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.
வீடியோ
தேசிய வானிலை சேவை இயக்குனர் கென் கிரஹாம் இதுபற்றி பேசுகையில், "இது பல ஆண்டுகளுக்கு நாம் பேசும் புயலாக இருக்கும். இது ஒரு வரலாற்று நிகழ்வு" என்றார். இந்த புயலினால் புளோரிடா மட்டும் அல்லாது தென்கிழக்கு மாநிலங்களான ஜார்ஜியா மற்றும் தென் கரோலினாவில் பல மில்லியன் மக்களை பாதிக்கும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் எங்கு நோக்கினும் இயான் புயல் குறித்த செய்தியாகவே இருக்கின்றன. மேலும், மக்கள் தங்களுடைய இடத்தில் நேர்ந்திருக்கும் பாதிப்பு குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், செய்தியாளர் ஒருவர் புயலில் சிக்கிய வீடியோ ஒன்று பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
சிக்கிய செய்தியாளர்
ஜிம் காண்டூர் எனும் வானிலை நிபுணர் சாலையில் நின்று வானிலை விபரம் குறித்து பேசிக்கொண்டிருக்க, திடீரென பயங்கர சத்தத்துடன் காற்று வீசத் துவங்குகிறது. இதனால் அங்கிருந்து நகர நினைத்த ஜிம், தடுமாறி சாலையில் விழுகிறார். அவரது காலில் மரக்கிளை ஒன்றும் சிக்குகிறது. இருப்பினும் சுதாரித்து சாலையின் ஓரத்திற்கு வரும் அவர், அங்கிருந்த கம்பம் ஒன்றை பிடித்துக்கொண்டு சற்றுநேரம் இளைப்பாறுகிறார். அதன்பிறகு, தனது குழுவுடன் இணைகிறார் அவர். இந்த வீடியோ காண்போரை திகைப்படைய செய்திருக்கிறது.
Weather Channel anchor pleads with Jim Cantore to get off the street pic.twitter.com/D4sJyXQqlT
— Gifdsports (@gifdsports) September 28, 2022