"இப்படி ஒரு அதிபர மொத முறையா பாக்குறேன்.. 'இதுக்காக' நடிக்க கூட மாட்டேங்குறாரு இந்த மனுஷன்!".. வறுத்தெடுத்த ராணுவ அதிகாரி!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற 42 வயது ஆப்பிரிக்க அமெரிக்கர் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் இருக்கும் மின்னெபொலிஸ் நகரில், போலீஸ் பிடியில் இருக்கும்போது உயிரிழந்தார். அவரை கீழே தள்ளி, கழுத்தில் தன் கால்முட்டியை வைத்துப் பலமாக அழுத்தி போலீஸ்காரர் ஒருவர் செய்த காரியத்தால் ஜார்ஜ் உயிரிழந்துள்ளார். அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

பின்னர் அந்த போலீஸ்காரரின் செயல். வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி, அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த, ஜார்ஜின் மரணத்துக்கு நீதி கேட்டு லட்சக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். ஒரு பக்கம் கொரோனாவாலும் இன்னொரு பக்கம் இப்போது நடக்கும் போராட்டத்தாலும் மொத்த அமெரிக்காவும் ஸ்தம்பித்துள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆட்சி முறையை எதிர்க்கட்சியினரும் பல்வேறு தலைவர்களும் வெகுவாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் ராணுவச் செயலரும் அந்நாட்டு அரசாங்கத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்தவருமாகக் கருதப்படும் ஜேம்ஸ் மேட்டிஸ், நீண்ட நாள்களுக்குப் பிறகு, அட்லாண்டிக் பத்திரிகையில், அதிபர் ட்ரம்ப் மீதான தமது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில் “ எனது வாழ்நாளிலேயே, மக்களை ஒன்றிணைக்க கொஞ்சம் கூட முனையாத முதல் அதிபர் ட்ரம்ப் தான். அவர், மக்களை ஒன்றிணைப்பதாக நடிக்கக் கூட மாட்டேன் என்கிறார். அதற்கு பதிலாக மேலும் மேலும் மக்களை பிரிக்கவே முயல்கிறார். முதிர்ச்சியற்ற இந்த தலைமையால் ஏற்பட்ட விளைவுகளைக் கடந்த 3 வருடங்களாக நாம் , நம் ண்முன்னே காண்கிறோம். மக்களால் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் யாவும், அனைவரும் இணைந்து ஒரு தேசமாக வாழ வேண்டும் என்றே அவர்கள் வலியுறுத்துகின்றன” என்று ஜேம்ஸ் கூறியுள்ளார்.
அதே சமயத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு துருப்புகள், சக குடிமக்களின் உரிமைகளை மீறும் என கனவிலும் தான் நினைத்துப் பார்க்கவில்லை என்றும் ஜேம்ஸ் பேசியுள்ளார். 2018-ம் ஆண்டு, ட்ரம்ப்பின் அமைச்சரவையிலிருந்த ஜேம்ஸுக்கும் அதிபருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அதிரடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்தவர், ஜேம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
