'கொரோனா' தடுப்பூசி சோதனைகளை இவர்களிடம் நடத்த வேண்டும்.... 'வன்மையாகக் கண்டித்த WHO...' 'அனுமதிக்க மாட்டோம் என உறுதி...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தடுப்பூசி சோதனைகளை ஆப்பிரிக்கர்களிடம் நடத்த வேண்டும் என சில விஞ்ஞானிகள் கூறியுள்ளதை உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி சோதனைகளை ஆப்பிரிக்கர்களிடம் நடத்த வேண்டும் என ஃபிரான்ஸ் விஞ்ஞானிகள் கூறியுள்ளதை சுட்டிக் காட்டினார். இது ஒரு மேலாதிக்க மனோபாவம் என தெரிவித்த அவர், இதனை வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டார்.
21-ம் நூற்றாண்டில் இதுபோன்ற கருத்துகளை விஞ்ஞானிகளிடமிருந்து கேட்பது மிகவும் அவமானமாக உள்ளது. நாங்கள் இதை மிகவும் வலுவாகக் கண்டிக்கிறோம். இப்படி ஒரு விஷயம் நிச்சயம் நடக்கவே நடக்காது என நாங்கள் உறுதியளிக்கிறோம். எந்த ஒரு தடுப்பூசிக்கும் சோதனை நடத்த ஆப்பிரிக்கா ஒன்றும் சோதனைக் களம் கிடையாது. அங்கு இதுபோன்ற சோதனைகளைச் செய்ய முடியாது. செய்வதற்கு நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம். இது நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என அவர் ஆப்பிரிக்க கண்டத்தவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
"முதலில் அறிவியலாளர்கள் இதுபோன்ற தங்கள் அதிகார மனப்போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு தடுப்பூசியைச் சோதிக்க உலக சுகாதார அமைப்பு என்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்கக் கூறியுள்ளதோ அதை மட்டுமே உலக சமூகம் செய்ய வேண்டும். அது ஆப்பிரிக்காவாக இருந்தாலும் சரி ஐரோப்பாவாக இருந்தாலும் சரி, விதிமுறை என்பது அனைவருக்கும் ஒன்றுதான்" எனக் கூறினார்.
"ஆப்பிரிக்க மக்கள் மீது தடுப்பூசி பரிசோதிக்கும் ஆலோசனைகள், இனவெறி பிடித்த வார்த்தைகள். இதை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். இதுபோன்ற பரிசோதனைகள் ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல வேறு எந்த நாட்டிலும் நடத்த அனுமதிக்க மாட்டோம். மனிதர்களை மனிதர்களாக நடத்துங்கள்” என மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
