'முதல் முறையா நிம்மதி பெருமூச்சு'...'புதிய அறிக்கையை வெளியிட்ட சீனா'...ஆனா புதுசா கிளம்பும் பூதம்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை என்று, அந்நாட்டுத் தேசிய சுகாதார ஆணையம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் நோய்த் தொற்று தற்போது புதிய ரூபத்தில் அங்குப் பரவ தொடங்கியுள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரிலிருந்து தான் கொரோனா வைரஸ் முதல் முதலாகப் பரவ தொடங்கியது. இன்று உலக நாடுகளை எல்லாம் அச்சுறுத்தி வரும் இந்த வைரசால் பாதிக்கப்படாத நாடுகள் என்ற கணக்கை விரல் விட்டு எண்ணிவிடலாம். முதலில் சீனாவை உலுக்கத் தொடங்கிய கொரோனாவை கட்டுப்படுத்த சீன அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் எதுவும் அங்குப் பலிக்கவில்லை. பின்னர் சீனாவின் தொடர் நடவடிக்கைகளால், தற்போது கணிசமாக கொரோனா அங்குக் கட்டுக்குள் வந்துள்ளது.
இந்நிலையில் சீனாவில் கொரோனா ருத்திரத்தாண்டவம் ஆடிய போது அங்கு ஏராளமான உயிரிழப்புகள் பதிவான பிறகு நேற்று, முதல் முறையாக அங்கு கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை எனச் சீன சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் உயிரிழப்புகள் தொடர்ந்த நிலையில், தற்போது சீனாவின் அறிக்கை அந்த நாட்டு மக்களுக்கு சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது.
அதேநேரத்தில் சீனாவிற்கு தற்போது மற்றொரு தலைவலி ஏற்பட்டுள்ளது. சீனாவில் புதிதாக உள்ளூரில் இருந்து கொரோனா தொற்று ஏற்படவில்லை எனக் கூறினாலும், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தற்போது தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் மூலமாகவும் கொரோனா தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இது அங்கு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
