"தல முடி இந்த COLOUR-ல இருந்தா சினிமா டிக்கெட் FREE".. புதுசால்ல இருக்கு? விசேஷ அறிவிப்பின் பிண்ணனி..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் வெப்பநிலையை கருத்தில்கொண்டு சிவப்பு நிற தலைமுடி கொண்டவர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்குவதாக அறிவித்திருக்கிறது தியேட்டர் ஒன்று.

உலகளவில் காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை உயர்ந்துவருகிறது. இதன் காரணமாக கடுமையான வெப்பநிலை உயர்வால் பல நாடுகள் திணறி வருகின்றன. வழக்கத்தினை விட கூடுதலாக வெப்பநிலை பதிவாவதால் மக்களை அரசுகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்திவருகின்றன. இந்நிலையில், பிரிட்டனும் இத்தகைய சிக்கல்களை சந்தித்துவருகிறது. அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்திருக்கிறது.
ரெட் அலெர்ட்
இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை தொட்டுள்ளது. ஜூலை நடுப்பகுதியில் லண்டனில் வெப்பநிலை பொதுவாக 21 டிகிரி செல்சியஸ் (70 F) இருக்கும். ஆனால் இந்த கோடையில் வெப்பநிலை 38C வரை உயரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. முக்கிய நகரங்களான பர்மிங்காம் மற்றும் மான்செஸ்டர் ஆகியவற்றிலும் இதன்பாதிப்பு இருக்கலாம் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.
இதனையடுத்து, திடீரென அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக, பொதுமக்களை அதிலிருந்து பாதுகாக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் அதிரடி ஆபர்களை வெளியிட்டுள்ளன. நீச்சல் குளங்களில் சிறப்பு தள்ளுபடி பொது குளியலறைகளில் தள்ளுபடி என மக்களை வெப்ப தாக்குதலில் இருந்து காக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த திரையரங்கம் ஒன்று இலவசமாக டிக்கெட்களை வழங்கி வருகிறது. ஆனால், அதற்கு அவர்கள் விதித்துள்ள நிபந்தனை தான் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
இலவச டிக்கெட்
அதாவது, சிவப்பு நிற தலைமுடி கொண்டவர்களுக்கு மட்டும் இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என தியேட்டர் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் சிவப்பு நிற தலைமுடி கொண்டவர்கள் எளிதில் பாதிக்கப்படலாம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தியேட்டர் நிர்வாகம் கூறியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள இந்த தியேட்டரின் இயக்குனர்," இன்றும் நாளையும் பிரிட்டனை சேர்ந்த சிவப்பு நிற தலைமுடி கொண்டவர்கள் இலவசமாக குளிர்சாதன திரையரங்கில் படம் பார்க்கலாம். வெப்பநிலையால் அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்றார்.
பிரிட்டனில் அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக சிவப்பு நிற தலைமுடி கொண்டவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என தியேட்டர் நிர்வாகம் அறிவித்திருப்பது பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

மற்ற செய்திகள்
