“இந்தியாவ நம்பி, போன வருஷம்தானே இத செஞ்சோம்!”.. டிக்டாக், ஹெலோ ஆப் தடை.. சீன நிறுவனத்துக்கு ஏற்பட்ட எழ முடியாத அடி!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவில் டிக் டாக் மீது இந்திய அரசு விதித்துள்ள தடையால், அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு 45 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
கிழக்கில் லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 15ஆம் தேதி இந்திய - சீன ராணுவத்தினரிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியானதை அடுத்து இந்திய எல்லையில் போர் பதற்றம் நீடித்து வந்தது. இதனையடுத்து சீன பொருட்களை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்கிற கருத்துக்கள் வலுவடைந்தன. அதன் ஒரு அங்கமாக சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கைகள் மற்றும் புகார்கள் எழுந்ததை அடுத்து தேச பாதுகாப்பு மற்றும் தனிநபர் அந்தரங்க உரிமை உள்ளிட்ட காரணங்களுக்காக சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளான டிக்டாக், ஹலோ ஆப், ஷேர் இட், யூசி ப்ரவுசர் வி-சாட் உள்ளிட்ட 59 செயல்களுக்கு மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அன்று அதிரடியாக தடை விதித்தது.
மேலும் இது பற்றிய விளக்கம் கூறிய இந்திய அரசு, இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு கேடு விளைக்கும் நடவடிக்கைகளுக்காக இச்செயலிகள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக டிக்டாக் செயலி, ஹெலோ ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு ரூபாய் 45 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படுவதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது. செல்போன் செயலிகளை ஆய்வு செய்யும் சென்சார் டூவர் நிறுவனம் அளித்துள்ள புள்ளிவிவரப்படி கடந்த மே மாதம் டிக்டாக் செயலி 11.2 கோடி முறை இந்தியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் பதிவிறக்கம் செய்யப்பட்டதைவிடவும், இருமடங்கு இந்தியாவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட நிலையில் டிக்டாக் செயலிக்கு முக்கிய வருவாய் ஆதார நாடாக இல்லாவிட்டாலும் அந்த செயலியை அதிகம் பதிவிறக்கம் செய்த முன்னணி நாடுகளில் ஒன்றான இந்தியாவில் இந்த செயலி தடை செய்யப்பட்டதால், மேற்கண்ட இழப்பு அந்த நிறுவனத்துக்கு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம் கடந்த ஆண்டுதான் இந்திய சந்தையில் சுமார் ரூ. 7 ஆயிரத்து 473 கோடி முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.