‘மத்திய அரசால் எச்சரிக்கப்பட்ட ஆப்’... ‘விலகும் பயனர்கள்’... ‘களத்தில் இறங்கிய கூகுள்’!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்எளிதாக ஹேக் மற்றும் பிரைவசி இல்லை என்று எச்சரிக்கப்பட்ட Zoom இல்லையென்றால், அதற்கான மாற்று எது யோசித்துக் கொண்டிருந்த வேலையில், கூகுள் தூசித் தட்டி தனது ஆப் ஒன்றை களமிறக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்' என்பது ஐ.டி, துறை மட்டுமல்லாது, பள்ளி, கல்லூரிகள் உள்பட பலருக்கும் புதிய வேலை கலாசாரமாக மாறிவிட்டது. வீட்டிலிருந்தபடியே வேலைப்பார்க்கும் அநேகர், வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் இணைந்திருக்க, Zoom செயலியைத்தான் பரவலாகப் பயன்படுத்தி வந்தனர். மற்ற வீடியோ காலிங் செயலிகள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த சிறப்பாக இருந்தாலும், தொழில்ரீதியில் குழுவாக இயங்க Zoom செயலி சிறப்பான வசதிகளை வழங்கியதால், பலரும் அதைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
இந்நிலையில், சமீபத்தில் மிகப் பெரிய குற்றச்சாட்டாக முன் வைக்கப்பட்டது, Zoom-ஐ எளிதாக ஹேக் செய்யலாம் என்பது. இந்திய அரசும் Zoom செயலி ஆபத்தானது. அதைப் பயன்படுத்த வேண்டாம் என அதிகாரபூர்வமாகவே அறிவித்துள்ளது. Zoom இல்லையென்றால், அதற்கான மாற்று என யோசித்துக் கொண்டிருந்த வேளையில், ஏற்கெனவே தான் வழங்கிவந்த 'ஹேங்அவுட்ஸ் மீட்' (Hangouts Meet) செயலியை மெருகேற்றி, அதைப் பயனர்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறது, கூகுள்.
ஹேங்அவுட்ஸ் என்ற பெயரை மாற்றி, கூகுள் மீட் என்று பயனர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வசதிகளையும் மாற்றிவருகிறது கூகுள். அதன் ஒரு பகுதியாக, சென்ற மார்ச் மாதம், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பயன்படுத்தும்போது, அந்த மீட்டிங்கின் மொத்த கட்டுப்பாடும் ஆசிரியர்கள் வசமே இருக்குமாறு ஒரு வசதியை அறிமுகப்படுத்தியது. அதில் மாணவர்கள், மீட்டிங்கி்ல் ஆடியோவை மியூட் செய்ய முடியாது, ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் மட்டும் குறிப்பிட்ட மீட்டிங்கில் இருக்க முடியாது போன்ற வசதிகளையும் அறிமுகப்படுத்தியது. Zoom செயலி வழங்கிவந்த பல வசதிகளையும் விரைவில் கூகுள் மீட் செயலியில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
