"ஒரு தடயமும் இல்லையே.." திருடனை பிடிக்க வழி தேடிய போலீஸ்.. "கடைசியா கொசு கொடுத்த 'CLUE'
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக ஒரு திருடன், எங்காவது திருடிவிட்டு செல்லும் போது, அங்கிருந்த ஏதாவது ஒரு தடயங்கள் கொண்டு போலீசார்கள் திருடர்களை பிடிக்க முயல்வார்கள்.

Also Read | கள்ளக்குறிச்சி மாணவி மறைவு.. யாருமில்லாத வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்.. இரவு நேரத்தில் நடந்த பரபரப்பு
அப்படி, சீனாவில் கொசு மூலம் ஒரு திருடன் சிக்கியுள்ள சம்பவம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
தென் சீனாவின் ஃபியூஜியான் மாகாணத்தில் அமைந்துள்ளது ஃபுசோவ் நகரம். இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் யங் சென் என்பவர் வசித்து வருகிறார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில், தொடர்ந்து பல நாட்கள் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த திருடன், வீட்டை நோட்டமிட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, யங் சென் வீட்டில் திருட அந்த நபர் முடிவு செய்து, அந்த குடியிருப்பின் பின்பக்கம் இருந்த கழிவு நீர் பைப் மூலம், வீட்டிற்குள் சென்றுள்ளார்.
உள்ளே சென்ற திருடன், அங்கிருந்து பல லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை மூட்டை கட்டி எடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல், பசியின் காரணமாக, அங்கே இருந்த நூடுல்ஸை சமைத்து உண்டதுடன், சற்று நேரம் அங்கு தூங்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர், அதிகாலை வேளையில் கொள்ளையடித்த பொருட்களுடன் அந்த திருடன் அங்கு இருந்து தப்பித்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனிடையே, வெளியூர் சென்றிருந்த வீட்டின் உரிமையாளரான யங் சென், மீண்டும் வீட்டுக்கு திரும்பி பார்த்த போது, அவரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ந்து போயினர். தனது வீட்டில் நடந்த கொள்ளை பற்றி, போலீசில் புகார் ஒன்றையும் அவர் கொடுத்துள்ளார். இது தொடர்பாக, போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், திருடன் விட்டுச் சென்ற தடயங்கள் ஏதாவது வீட்டில் இருக்கிறதா என்றும் சோதித்து பார்த்துள்ளனர்.
அந்த சமயத்தில், படுக்கை அறை அருகே சுவற்றில் சிறியதாக ரத்தக்கறை ஒன்று இருப்பதை போலீசார் கண்டுள்ளனர். அதன் அருகே சென்று பார்த்த போது, இரண்டு கொசுக்கள் சுவற்றில் அடிபட்டு இறந்த நிலையில் இருந்தது. அதிலிருந்து ரத்தக் கறைகளை DNA சோதனைக்காகவும் போலீசார் சேகரித்து ஆய்வகம் அனுப்பி வைத்தனர்.
இதனை அப்பகுதியில் உள்ள மற்ற திருடர்களின் ரத்த மாதிரிகளுடன் ஒப்பிட்டு பார்த்த போது, திருடன் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதிகம் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய அந்த திருடனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்டு வீட்டின் உரிமையாளரிடமும் ஒப்படைத்தனர்.
கைரேகை, திருடனின் ஆடை உள்ளிட்ட பல பொருள்களைக் கொண்டு திருடன் சிக்கி உள்ளதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கொசுவை அடித்ததன் பெயரில், அதிலிருந்த ரத்தத்தின் டிஎன்ஏ மூலம் திருடன் சிக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தன்னைக் கொண்ட திருடனை கொசு பழி வாங்கி விட்டதாகவும் சிலர் வேடிக்கையாக குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
